5 லட்சத்திற்கும் அதிக நட்சத்திரங்கள்.. ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் எடுத்த செம புகைப்படம்!
இரவு வானத்தில் தெரியும் கொஞ்ச நட்சத்திரங்களைக் கண்டே பிரமித்துப்போகிறவர்கள் மேலும் அசந்து போகும் அளவுக்கு ஐந்து லட்சத்துக்கும் அதிக நட்சத்திரக் கூட்டத்தை பதிவு செய்திருக்கிறது ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்.
பிரபஞ்ச ரகசியத்தை கண்டறிவதற்காக 2021 ஆம் ஆண்டு நாசாவால் அனுப்பப்பட்ட ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் , சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள விடை தெரியாத பல கேள்விகளுக்கான பதிலை புகைப்படங்கள் மூலமாக தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.
தற்போது, சூரிய குடும்பம் இருக்கும் பால்வெளி அண்டத்தின் மையப் பகுதியை ஜேம்ஸ்வெப் டெலஸ்கோப் புகைப்படமாக எடுத்துள்ளது.
பால்வெளி அண்டத்தில் அணுக்கரு பகுதி என கூறப்படும் சேகடேரியஸ் - சி எனும் நட்சத்திரக் கூட்டத்தை குவியப்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சூரியன் போன்று 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்மீன்கள் பதிவாகியுள்ளன.
பூமியில் இருந்து 25 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் பால்வெளி அண்டத்தின் மையப் பகுதியில், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் இருக்கும் அகச்சிவப்பு கேமராக்கள் மூலம் இவை பதிவு செய்யப்பட்டுள்ளன.