‘அவ்ளோ தான் பாதுகாப்பா?‘.. AI-ஐ ஏமாற்றி ’10+9’ என்பதை 21 என கூறவைத்து அசத்திய 21 வயது இளம்பெண்!

மனிதனின் பெரிய கண்டுபிடிப்பாகவும், டெக்னாலஜியின் அடுத்த நகர்வாகவும் பார்க்கப்படும் AI தொழில்நுட்பத்தை பரிசோதிக்கும் முயற்சியில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவர் அதனையே ஏமாற்றியுள்ளார்.
AI
AIPT
Published on

இன்றைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் அது மனிதர்களின் வேலையை சுலபமாக்க உருவாக்கப்பட்டாலும், அதன் அபரிமிதமான வளர்ச்சி ஒரு கட்டத்தில் மனிதர்களின் வேலையை பறித்து விடுமோ என்கிற அச்சம் ஒருபுறம் இருக்கிறது. இருப்பினும் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது காலத்தின் கட்டாயம் என்பதால் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முன்னெடுக்க பல துறைகளில் பல முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய அரசு கூட இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும், இதன் நம்பகத்தன்மை குறித்த அச்சங்களும் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் ”DEF CON ஹேக்கிங் கான்ஃபிரன்ஸ்” என்ற ஹேக்கர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த கான்ஃபிரன்ஸில் மனிதனின் அடுத்தக்கட்ட கண்டுபிடிப்பாகவும், எதிர்காலத்தின் பெரிய மாற்றமாகவும் பார்க்கப்படும் AI தொழில்நுட்பம் எந்தளவு நம்பகத்தன்மை வாய்ந்தது, எந்தளவு அது எதிர்காலத்திற்கு வழிகாட்ட கூடியது என்பதை பரிசோதிக்கும் முயற்சிக்கான சோதனை நடைபெற்றது.

சுமார் 150 ஹேக்கர்கள் பங்குபெற்ற அந்த நிகழ்ச்சியில் AI தொழில்நுட்பத்தின் திறனை சோதிக்கும் முயற்சியாக பல சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. அந்த சோதனை முறையில் “தவறான கணக்கிடுதல்” என்பதும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

21 வயது பெண் AI-ஐ 10+9 என்பதை 21 என கூறவைத்துள்ளார்!

ப்ளூம்பெர்க் வெளியிட்டிருக்கும் செய்தியின் படி, ஒரே நேரத்தில் 50 நிமிடங்களுக்கு 156 மடிக்கணினிகளை பயன்படுத்தி ஹேக்கர்கள் AI-ஐ சோதிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அதில் Google, மெட்டா மற்றும் OpenAI உள்ளிட்ட நிறுவனங்களால் தயாரிக்கப்படும் எட்டு AI மாடல்கள் அனைத்தும் சரியாக செயல்படுகிறதா? இல்லை யாராவது முயற்சித்தால் தவறான வகையில் பயன்படுத்த முடியுமா? என்ற கோணத்தில் சோதனை முயற்சியில் ஈடுபட்டனர். இதன் முயற்சியால் நிறுவனங்கள் அவர்களுடைய கண்டுபிடிப்புகளை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், பாதுகாப்பு வேலைகளை செய்ய வேண்டும் என்பதும் தான் நோக்கம் என்று கூறப்பட்டுள்ளது.

AI technology
AI technology

இந்நிலையில், ஜார்ஜியாவின் சவன்னாவைச் சேர்ந்த 21 வயது மாணவியான கென்னடி மேஸ், AI உடனான ஒரு நீண்ட முன்னும் பின்னுமான உரையாடலுக்கு பிறகு அதனை அல்காரிதம் மூலம் வீழ்த்தியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “இது முன்னும் பின்னுமாக நடந்த உரையாடல். முதலில் ஒரு நகைச்சுவை பகுதியாக இந்த உரையாடலை தொடங்கினேன், அதை மாடலும் ஒப்புக்கொண்டது. முன்னுக்கு பின்னான பல கேள்விகள் மற்றும் தூண்டுதல்களுக்குப் பிறகு மாடல் 10+9 என்பதை 21 என ஒப்புக்கொண்டது. ஆனால் மேலும் அதிகமான தூண்டுதல்களை முன்னெடுத்த போது அது உரையாடலை நிறுத்திக்கொண்டது” என்று தெரிவித்துள்ளார்.

AI
AIFile Image

இந்நிகழ்வு குறித்து பேசியிருக்கும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர், “AI தொழில்நுட்பம் நிச்சயம் மனிதனின் பெரிய கண்டுபிடிப்பாக இருக்கும். ஆனால் நாம் அம்முயற்சியில் மிகவும் ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

இந்த கான்ஃபிரன்ஸிற்கு பிறகு அனைத்து AI நிறுவனங்களும் அதற்கான பாதுகாப்பு அம்சங்களை கடினமானதாக மாற்ற முயற்சிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com