இந்தியாவை பொறுத்தவரையில் செல்போன் பயனாளர்கள் தற்போது 4ஜி இணைய சேவையை பயன்படுத்தி வருகின்றனர். 4ஜி மூலம் அதிவேக இண்டர்நெட், லைவ் ஸ்ட்ரீமிங், மொபைல் டி.வி, தடைபடாத துல்லியமான வீடியோ கால்கள் போன்ற எண்ணற்ற வசதிகள் சாத்தியமாகின.
மேலும் 5ஜி நடைமுறைக்கு வந்தால் 4ஜியைக் காட்டிலும் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 5ஜிக்கு பிறகு தகவல் பரிமாற்றத்தில் வீடியோவின் பங்கே அதிகமாக இருக்கும். சிசிடிவி கேமராக்களின் கண்காணிப்பில் பல முக்கிய மைல் கல்லை எட்ட முடியும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் 5ஜி தொழில்நுட்பம் ஒவ்வொருவரையும் டிஜிட்டல் பயன்பாட்டிற்குள் கொண்டு வரும் என மத்திய தொலைதொடர்புத்துறை செயலர் அருணா சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். “இந்த ஆண்டின் மத்தியில் 5ஜி அலைக்கற்றையை ஏலம் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், சுமார் 4.9 லட்சம் கோடி மதிப்பில் 8 ஆயிரத்து 644 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளை ஏலம் விட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நிதி நெருக்கடியில் உள்ளதாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூறுவதால், அலைக்கற்றை ஏலத்தொகையை குறைக்க வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளதாகவும் அருணா சுந்தர்ராஜன் தெரிவித்தார்.