முடிவுக்கு வரும் 27 ஆண்டு பயணம்! ஜூன் 15 அன்று மூடுவிழா காணும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்!
மைக்ரோசாஃப்டின் முக்கிய மென்பொருளான இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் (INTERNET EXPLORER) வரும் ஜூன் 15-ஆம் தேதியுடன் நிறுத்தப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 1995-ஆம் ஆண்டு இறுதியில் இந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் துவங்கப்பட்டது. இதன் சேவையை இணையத்தை பயன்படுத்தத் தொடங்கியவர்கள் பயன்படுத்தாமல் இருந்திருக்க முடியாது என்றே சொல்லாம்.
எனினும் தற்போது கூகுள் குரோம், பயர்பாக்ஸ், மைக்ரோசாஃப்ட் எட்ஜ் போன்ற போட்டியாளர்கள் இருப்பதால் அதன் சேவையை முற்றிலும் நிறுத்த மைக்ரோசாஃப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, புதன்கிழமையுடன் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேவையை நிறுத்திக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஜூன் 15, 2022 அன்று முதல் விண்டோஸ் 10 இன் சில பதிப்புகளில் இனி வேலை செய்யாது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அனுபவத்தை விரும்புவர்கள் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் பிரவுசரை பயன்படுத்தலாம். இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை விட மைக்ரோசாஃப்ட் எட்ஜ் வேகமான, பாதுகாப்பான மற்றும் நவீன உலாவல் அனுபவமாக இருப்பது மட்டுமல்லாமல், பழைய, பாரம்பரிய இணையதளங்கள் மற்றும் பயன்பாடுகளுக்கான பொருந்தக்கூடியதாகவும் இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளது.