கிராமங்களுக்கு 1 Gbps வேக இணைய சேவை - தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பாரத்நெட் திட்டம்

கிராமங்களுக்கு 1 Gbps வேக இணைய சேவை - தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பாரத்நெட் திட்டம்
கிராமங்களுக்கு 1 Gbps வேக இணைய சேவை - தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பாரத்நெட் திட்டம்
Published on

கிராமங்களுக்கும் 1Gbps வேகம் கொண்ட இணையச் சேவையை வழங்கும் பாரத்நெட் திட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது தமிழக அரசு

இந்தியா முழுவதும் உள்ள கிராமங்களுக்கு அதிவேக இணையச் சேவையைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது பாரத் நெட் திட்டம். இந்த திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்தால் தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளும் ஃபைபர் ஆப்டிக் கேபிள் மூலமாக இணைக்கப்படும்.



ஆனால் அறிவிக்கப்பட்டுப் பல வருடங்களாகியும் தமிழ்நாட்டில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வந்தது இந்த திட்டம். முந்தைய அதிமுக அரசின் ஆட்சிக்காலத்தில் இந்த திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள 2020-ம் ஆண்டு ரூ.1950 கோடி  செலவில் டெண்டர் விடப்பட்டது. அதன் பின்னர் வேலைகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த டெண்டரில் ஊழல் நடைபெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய அரசும் அந்த டெண்டரை ரத்து செய்தது.  

இந்நிலையில், கடந்த வருடம் ஆட்சி பொறுப்பேற்ற திமுக அரசு பாரத் நெட் திட்டத்தைச் செயல்படுத்தும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷன் லிமிட்டெட் (TANFINET )  நிறுவனம் சார்பில் இரண்டாம் கட்ட பணிகளைத் தொடங்குவதற்கான ஒப்பந்தம் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ்  முன்னிலையில் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன்
மூலம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளுர், வேலூர், கிருஷ்ணகிரி, இராணிபேட்டை, திருப்பத்தூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் உள்ள 3095 கிராம பஞ்சாயத்துகளில் பாரத் நெட் திட்டப் பணிகள் நடைபெறும்.



மேலும், தமிழ்நாட்டில் ஒட்டு மொத்த பாரத்நெட் திட்டப்  பணிகள் ரூ.1815 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். இன்னும் ஓராண்டுக்குள் கேபிள் பதிக்கும் பணிகள் முடிவடைந்து கிராமங்களுக்கு இணைய இணைப்பு வசதி கிடைக்கும் என தமிழக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அதிவேக இணையச் சேவையானது பெருநகரங்களில் மட்டுமே கிடைத்து வருகிறது. பாரத்நெட் திட்டம் கிராமங்களுக்கும் 1Gbps வேகம் கொண்ட இணையச் சேவையை வழங்கும்.

- ராஜேஷ் முருகன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com