விக்ரம் லேண்டருக்கு இன்றே இறுதி நாள் - ‘சந்திரயான் 2’ உருவான வரலாறு!

விக்ரம் லேண்டருக்கு இன்றே இறுதி நாள் - ‘சந்திரயான் 2’ உருவான வரலாறு!
விக்ரம் லேண்டருக்கு இன்றே இறுதி நாள்  - ‘சந்திரயான் 2’ உருவான வரலாறு!
Published on

இந்தியா முதன்முறையாக நிலவிற்கு சந்திரயான்-I விண்கலத்தை 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி அனுப்பியது. இந்த விண்கலம் நிலவின் தரைபகுதியிலிருந்து 100கிலோமீட்டர் உயரத்தில் சுற்றி வந்தது. இந்த விண்கலம் நிலவிலுள்ள சூழல்கள், கனிமங்கள் குறித்து ஆய்வு செய்தது. இதனையடுத்து சந்திரயான்-I விண்கலம் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதன் ஆயுள் காலத்தை நிறைவு செய்தது. அதன்பின்னர் இந்தியா மீண்டும் நிலவிற்கு சந்திரயான்-II விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டது. 

உலக நாடுகளிலேயே முதன்முறையாக நிலவின் தென்துருவ பகுதியை ஆராய, சந்திரயான்-2 விண்கலத்தை ஏவ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டது. அதன்படி, ஜூலை 15ஆம் தேதி சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ சார்பில் அறிவிக்கப்பட்டது. சந்திரயான்-2 விண்கலத்தில் 3 முக்கிய தொழில்நுட்பங்களை வைத்து அனுப்ப முடிவு செய்யப்பட்டது. 

அவை ஆர்பிட்டர் (Orbiter), லேண்டர் (Lander), ரோவர் (Rover).  ஆர்பிட்டர் மற்றும் லேண்டர் இணைக்கப்பட்டு ஜி.எஸ்.எல்.வி மார்க்-III-ன் மூலம் ஏவப்படும் எனப்பட்டது. லேண்டரினுள் ரோவர் பொருத்தப்பட்டது. சந்திரயான்-2 பூமியிலிருந்து ஏவப்பட்டவுடன் ஆர்பிடர் ப்ரோபல்ஷன் மூலம் நிலவை சென்றடையும் எனக் கூறப்பட்டது. அதன் பின்னர் லேண்டர் மற்றும் ரோவர் தனியாக பிரிந்து, லண்டர் நிலவின் தென் துருவத்திலுள்ள தரைப்பகுதியில் இறங்கும். நிலவில் இறங்கிய பிறகு ரோவர் பல ஆய்வுகளை நடத்தும் எனவும் இஸ்ரோ தெரிவித்திருந்தது.

திட்டமிட்டபடி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து 15ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட இருந்தது. 978 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தை, பாகுபலி என வர்ணிக்கப்படும் மார்க்-3 ராக்கெட் மூலம் ஏவுவதற்கான கவுன்ட் டவுன் நேற்று காலை 6.51 மணிக்கு தொடங்கியது. சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதை நேரடியாக காண குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்பட ஆயிரக்கணக்கானோர் அங்கு ஆவலுடன் திரண்டிருந்தனர். ஆனால் சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதற்கு 56 நிமிடங்கள் 24 விநாடிகள் மட்டுமே இருந்த நிலையில், அதாவது அதிகாலை 1.55 மணியளவில் கவுன்ட் டவுன் திடீரென நிறுத்தப்பட்டது.

ராக்கெட்டில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறு, கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்திரயான்-2 விண்கலம் ஏவப்படுவது நிறுத்தப்பட்டதாகவும் இஸ்ரோ விளக்கம் அளித்தது. சந்திரயான்-2 விண்கலம் வேறொரு நாளில் ஏவப்படும் என தெரிவித்த இஸ்ரோ, ஏவப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியது. 

அதைத்தொடர்ந்து கோளாறுகள் சரிசெய்யப்பட்டு, பிப்ரவரி 22ஆம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த விஞ்ஞானிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.  விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் பூமியின் வட்டப் பாதையை 16 நிமிடங்களில் சென்றடைந்தது. சந்திரயான் - 2 விண்கலத்தை செலுத்திய இஸ்ரோவுக்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான ‘நாசா’ உடனடியாக வாழ்த்து தெரிவித்தது. 

இதனையொட்டி சந்திரயான் - 2வின் சுற்றுவட்டப் பாதைகள் அனைத்து வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டன. பின்னர், ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டரை பிரிக்கும் பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். அதன்படி ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் ‘விக்ரம்’  வெற்றிகரமாக பிரிந்து சென்றது. இது இஸ்ரோவின் மைல் கல்லாக பார்க்கப்பட்டது.

‘சந்திரயான் 2’ திட்டத்தின் நிறைவுப்பணியான, விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் பணிக்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்வை நேரலையில் காண, பெங்களூருவிலுள்ள இஸ்ரோ மையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார். நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும், பூடானைச் சேர்ந்த மாணவர்களும் அங்கு திரண்டிருந்தனர். விஞ்ஞானிகள் மட்டுமின்றி, நாட்டு மக்கள் அனைவரும் ஆர்வத்துடனும், எதிர்பார்ப்புடனும் காத்திருக்க, விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கத் தொடங்கியது.

திட்டமிட்டபடி நிலவை நோக்கிச் சென்ற விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்க 2.1 கிலோ மீட்டர் தொலைவே இருந்தபோது, சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனால், சிக்னல் மீண்டும் வரும் என்ற எதிர்பார்ப்பில் இஸ்ரோ மையமே நிசப்தமானது. பின்னர், பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், விக்ரம் லேண்டரிலிருந்து எதிர்பார்த்தபடி சிக்னல் கிடைக்கவில்லை என்று அறிவித்தார். எனினும், எதிர்வரும் விண்வெளித் திட்டங்களில் விஞ்ஞானிகள் சாதிப்பார்கள் என பிரதமர் மோடி நம்பிக்கையூட்டினார்.

இதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, பின்னர் அங்கிருந்து கிளம்பினார். அப்போது இஸ்ரோ தலைவர் சிவன், மோடியிடம் கண்ணீர் விட்டு அழுதார். அப்போது அவரைக் கட்டித் தழுவிய பிரதமர் மோடி, அவரைத் தேற்றி ஆறுதல் கூறினார். இதைக் கண்ட அங்கிருந்த மற்ற விஞ்ஞானிகளும் கண்கலங்கினர். 

இந்தச் சம்பவம் இந்திய அளவில் சோகத்தை, உலக அளவில் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. இஸ்ரோவுக்கு துணை நிற்போம் என ‘நாசா’ குரல் உதவிக்கரம் நீட்டியது. பின்னர் சந்திரயான் 2-ல் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்து  அனுப்பியது. ஆனால் லேண்டரிலிருந்து எந்தத் தகவலை பெற முடியவில்லை. அதன் சிக்னலையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தொடர்ந்து இஸ்ரோ போராடி வந்த நிலையில், சிக்னலை தொடர்பு கொள்ளும் ‘நாசா’வின் முயற்சியும் தோல்விலேயே முடிந்தது. 

இந்நிலையில், சந்திரயான் - 2 திட்டத்தின் கீழ் நிலவுக்கு அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பு இன்றுடன் முடிகிறது. நாளை முதல் சந்திரனில் 14 நாள் இரவுக் காலம் தொடங்கிவிடும் என்பதால் விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்வது இயலாததாகி விடும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அடுத்த 14 நாட்கள் நிலவில் சூரிய ஒளி இருக்காது என்பதால் மின் சக்தியை பெற இயலாது என்பதுடன் கடும் குளிர் நிலவும் என்பதால் மின்னணு பாகங்கள் செயலிழந்துவிடும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 

லேண்டரை ஒருபுறம் தொடர்பு கொள்ளமுடியாவிட்டாலும், மறுபுறம் சந்திரயான் - 2 திட்டத்தில் விண்ணில் ஏவப்பட்ட ஆர்பிட்டர் திட்டமிட்டபடி பணியை தொடர்வதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ தன்னுடைய இணைய பக்கத்தில் சிலர் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில், “ஆர்பிட்டரில் உள்ள அனைத்து தொழில்நுட்ப கருவிகளும் செயல்படுகிறது. ஆர்பிட்டர் தொழில்நுட்பத்தின் தொடக்க பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஆர்பிட்டரின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com