விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சியை இஸ்ரோ கைவிடவில்லை என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சந்திரயான் 2 விண்கலம் மூலம் நிலவின் தென் துருவத்தை ஆராய விக்ரம் லேண்டர் அனுப்பப்பட்டது. நிலவில் தரையிரங்க 2 கிலோ மீட்டர் தொலைவே இருந்த நிலையில், லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்து முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டிருந்தனர்.
இதனிடையே, கடந்த 21ஆம் தேதி முதல் நிலவின் தென் துருவ பகுதியில் இரவு தொடங்கியது. ஆகவே இரவு நேரத்தில் சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டரை தொடர்பு கொள்ள முடியாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன், “தற்போது நிலவின் தென் துருவ பகுதியில் இரவு இருப்பதால் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியாது. ஆகவே மீண்டும் அந்தப் பகுதியில் பகல் வந்தவுடன் நாங்கள் லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சிப்போம்” என பிடிஐ நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
முன்னதாக சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது ஏற்பட்ட கோளாறு குறித்து ஆராய தேசிய அளவில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தற்போது அதற்கான விஷயங்களை ஆராய்ந்து வருகிறது. இந்தக் குழு ஒரு மாதத்திற்குள் இது தொடர்பான அறிக்கையை சமர்பிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.