“வாடிக்கையாளர் உணவை ரசித்து ருசித்த சோமேடோ ஊழியர்” - வைரல் வீடியோ

“வாடிக்கையாளர் உணவை ரசித்து ருசித்த சோமேடோ ஊழியர்” - வைரல் வீடியோ
“வாடிக்கையாளர் உணவை ரசித்து ருசித்த சோமேடோ ஊழியர்” - வைரல் வீடியோ
Published on

வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த உணவுகளை ‘சோமேடோ’ டெலிவெரி நிறுவனத்தின் ஊழியர் சாப்பிடும் வீடியோ வைரலாகியுள்ளது.

இந்தியாவில் வேகமாக பரவியுள்ள நவீன நாகரிகமாகவும், வியாபாரமாகவும் இருப்பது ஆன்லைன் வர்த்தகம். இதில் தேவையான பொருட்களை ஆர்டர் செய்தால் வீட்டிற்கு வந்து கொடுத்துவிடுவார்கள் என்பதால் இந்த வர்த்தகம் மக்களிடம் வேகமாக சென்று சேர்ந்துள்ளது. குறிப்பாக இந்திய வர்த்தக்கத்தில் சில ஆன்லைன் நிறுவனங்கள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. இதுதவிர பல்வேறு ஆன்லைன் வர்த்தக முறைகளும் பெருகியுள்ளன. 

இதில் அண்மைக்காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்த ஒன்றாக பார்க்கப்படுவது ஆன்லைன் உணவு டெலிவெரி நிறுவனங்கள். நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நிறுவனங்களில் டெலிவெரி சேவை மூலம் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டு வருகின்றனர். அதேசமயம் இந்த நிறுவனங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையில் சிக்குவதையும் வாடிக்கையாக வைத்துள்ளன. சில மாதங்களுக்கு முன்னர் ஸ்விக்கி நிறுவனத்தில் பணிபுரியும் டெலிவெரி பாய்ஸ் சிலர், ரோட்டோர தள்ளு வண்டிக்கடையில் கூட்டமாக சப்பிடும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது. 

அதேபோன்று இந்த டெலிவெரி நிறுவனங்கள் உணவுகளை பாதி விலைக்கு வழங்கி, ஆஃபர்களை அள்ளிக்கொடுத்ததால் பழைய உணவுகள் இதில் வழங்கப்படுவதாகவும் சர்ச்சைகள் எழுந்தன. இதேபோன்று அண்மையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உணவுத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட கறி, நாய்க்கறி என்ற தகவல் வைரலானது. இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், அப்போதும் குற்றச்சாட்டுகள் ஆன்லைன் உணவு டெலிவெரி நிறுவனங்கள் மீதே விழுந்தன. இவ்வாறு பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து ஆன்லைன் உணவு டெலிவெரி நிறுவனங்கள் மீது எழுந்து வருகின்றன. 

இந்நிலையில் இப்போது அனைத்திற்கும் உச்சமாக ஒரு வீடியோ வைரலாகியுள்ளது. மதுரையில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் சோமேடோ நிறுவனத்தின் டெலிவெரி ஊழியர் ஒருவர் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு, தனது டெலிவெரி பையில் இருக்கும் உணவை எடுத்து ரசித்து ருசிக்கிறார். சிறிதளவு உணவை ருசித்த பின்னர், அந்த உணவின் மட்டத்தை சரிசெய்து பார்சல் செய்தபோது முன்பு இருந்தது போல் மீண்டும் எடுத்து வைக்கிறார். 

பின்னர் மீண்டும் மற்றொரு உணவுப் பொட்டளத்தை பிரித்து ருசிக்கிறார். இவ்வாறு தனது பையில் இருக்கும் அனைத்து உணவுகளை ருசித்த பின்னர், அந்த உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு டெலிவெரி செய்ய எடுத்துக்கொண்டு புறப்படுகிறார்.  இதை அருகில் இருந்த அடுக்கு வீட்டில் இருந்து ஒருவர், தனது போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. மேலும் ஆன்லைன் உணவு டெலிவெரி நிறுவனங்கள் மீதான வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையையும் குறைத்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com