சென்னையின் சாலை பள்ளத்தினால் பிரபல இந்திய மென்பொருள் நிறுவனமான zoho-ல் பணியாற்றிய இளம் பொறியாளர் ஷோபனா பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக zoho நிறுவன செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு ட்விட்டரில் மிகுந்த வேதனையோடு பதிவிட்டுள்ளார். அதில், “எங்கள் பொறியாளர்களில் ஒருவரான ஷோபனா சென்னை மதுரவாயல் அருகே மோசமான பள்ளத்தில் சிக்கி பரிதாபமாக இறந்திருக்கிறார். மோசமான சாலையால் பரிதாபகரமாக ஷோபனாவை அவரது குடும்பமும் zoho நிறுவனமும் இழந்துவிட்டது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நடந்தது என்ன?
சென்னை போரூரை சேர்ந்தவர் சோபனா (22). கூடுவாஞ்சேரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இவரது தம்பி திருவேற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் அவருக்கு அதே பள்ளியில் நீட் சம்பந்தமான பயிற்சி வகுப்புகளும் எடுக்கப்பட்டு வருவதால் நேற்று பள்ளிக்கு நேரமானதால் தனது தம்பியை ஷோபனா இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். தாம்பரம் மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில், மதுரவாயல் அருகே சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்தபோது பின்னால் வந்த மணல் ஏற்றி வந்த லாரி அவர் மீது ஏறி இறங்கிவிட்டது. இந்த விபத்தில் ஷோபனா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
இந்த விபத்தில் அவரது தம்பி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து போன சோபனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். பள்ளிக்கு தாமதமானதால் தம்பியை அழைத்துச் சென்றபோது சாலை விபத்தில் சிக்கி தம்பி கண்முன்னே அக்கா இறந்து போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த பகுதியில் உள்ள சாலை குண்டும் குழியுமாக இருப்பதாகவும், இந்த சாலையால் அடிக்கடி விபத்து நடப்பதாகவும் பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்