"ஒர்க் ஃப்ரம் ஹோம் முறையிலிருந்து கற்றுக்கொண்டது என்னவென்றால், அனைத்து பெரிய நிறுவனங்களுமே கிராமப்புறங்களில் தங்கள் கிளைகளை தொடங்கலாம் என்பதுதான்’’ என்று சோஹோ நிறுவனத்தின் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
தமிழகம் கொரோனாவில் இருந்து மீண்டும் வரும் நிலையில், 'துளிர்க்கும் நம்பிக்கை' என்ற தலைப்பில் புதிய தலைமுறை மற்றும் பேஸ்புக் நிறுவனம் இணைந்து சிறப்பு நிகழ்ச்சி நடத்தியது. நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வன் நெறியாள்கையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், சோஹோ நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு பேசுகையில், ’’மார்ச், ஏப்ரல் மாதங்களில் இருந்ததைப் போன்ற பயம், கிராமங்களில் கடந்த 3 மாதங்களாகவே இல்லை. மக்கள் யாரும் கொரோனாவை கண்டுகொள்வதில்லை. மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதாகவே உணர்கிறேன். நகரங்களுக்கு சென்றால் மட்டும்தான் கொரோனா பற்றியே தெரிகிறது.
தற்போது பல நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டுவிட்டது. கட்டாயப்படுத்தாமல் 10-20% பேர் அலுவலகத்திற்கு வர ஆரம்பித்துவிட்டனர். கொரோனாவால் நடந்த ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுவிட்டது. உலகளவில் நிறுவனங்கள் இயல்பாக செயல்பட ஆரம்பித்துவிட்டன.
'Work from home'-லிருந்து கற்றுக்கொண்டது என்னவென்றால், அனைத்து பெரிய நிறுவனங்களுமே கிராமப்புறங்களில் தங்கள் கிளைகளை தொடங்கலாம் என்பதுதான். நான் பள்ளி ஆரம்பித்ததற்கும் அதுதான் காரணம். கிராமப்புறங்களில் நமது கவனத்தைத் திருப்பவேண்டும். இங்கிருந்துதான் அடுத்த தலைமுறைகள் உருவாகி வருகின்றன. எதிர்காலமே இங்குதான் உள்ளது.
மேலும் தமிழக அரசிடம் நான் வைக்கும் ஒரு கோரிக்கை என்னவென்றால் அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளும் அரசுப் பள்ளியில்தான் படிக்கவேண்டும் என்று சட்டம் இயற்றப்பட வேண்டும். கிராமப்புற பள்ளிகளுக்கு அது மிகமிக அவசியம்’’ என்று பேசினார்.