சென்னை - வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற யூடியூபர் டிடிஎஃப் வாசன் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த பாலுச்செட்டிசத்திரம் காவல் துறையினர், செப்டம்பர் 19-ஆம் தேதி அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது.
இதையடுத்து புழல் சிறையில் இருந்து டிடிஎஃப் வாசன் பிணையில் வெளியே வந்தார். அப்போது, சர்வதேச ஓட்டுநர் உரிமம் பெறலாம் என்பதால், மீண்டும் கட்டாயம் வாகனம் ஓட்டுவேன் என டிடிஎஃப் வாசன் தெரிவித்தார்.
10 ஆண்டுகள் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டது ஏற்றுக் கொள்வதாக இல்லை என்றும், வாழ்க்கையை அழிக்கும் செயல் எனவும் அவர் கூறினார்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக போக்குவரத்து துறை ஆணையர், “சர்வதேச வாகன ஓட்டுநர் உரிமத்தை வைத்துக் கொண்டு யூடியூபர் டிடிஎஃப் வாசன் இந்தியாவில் எங்கும் வாகனம் ஓட்ட முடியாது” என தெரிவித்துள்ளார். சொந்த நாட்டில் வாகன ஓட்டுநர் உரிமம் ரத்தாகும் போது சர்வதேச ஓட்டுநர் உரிமமும் ரத்தாகும் என்றும் கூறியுள்ளார்.