தமிழ்நாட்டைச் சேர்ந்த யூட்யூபர் இர்ஃபான், உலகளவில் பிரபலம். Food Vlogger-ஆக இருந்த இர்ஃபான், இப்போதெல்லாம் அன்றாட வீடியோக்களை Vlog எடுத்து வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார். யூட்யூபில் மட்டும் 4 மில்லியனுக்கு அதிக ஃபாலோயர்களை கொண்ட இர்ஃபான், இன்ஸ்டா - முகநூல் போன்றவற்றிலும் செம பிரபலம். இதனால் இவரின் ஒவ்வொரு வீடியோவும் ஒவ்வொரு சமூகவலைதளத்திலும் எப்படியாவது குறைந்தபட்சம் 1 மில்லியன் வியூஸைத் தொட்டுவிடும்.
இதுபோன்ற காரணங்களால், மக்கள் மத்தியில் மட்டுமன்றி அரசியல் தலைவர்கள் மத்தியிலும்கூட இர்ஃபான் பிரபலம்தான். அதனாலேயே கடந்த வருடம் தன் திருமணத்துக்கு வெளிநாட்டிலுள்ள பிரபல யூ-ட்யூபர்கள் முதல் தமிழ்நாடு ஆளுநர் வரை பல முக்கியஸ்தர்களை நேரில் சந்தித்து பத்திரிகை தந்திருந்தார் இர்ஃபான். தற்போது இவரும் இவரின் மனைவி ஆசிஃபாவும் குழந்தையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், இவர் கடந்த சில தினங்களுக்கு முன் வீடியோவொன்று வெளியிட்டிருந்தார். அதில் பிறக்கவுள்ள தன் குழந்தை என்ன பாலினம் என்பதை கூறியிருந்தார் அவர். அந்த வீடியோவும், வெளியிடப்பட்ட முதல் நாளே 15 லட்சம் பார்வையகளை பெற்றது. தற்போது அந்த வீடியோவை நீக்கியிருக்கிறார்.
கருவுற்றிருந்த தன் மனைவி ஆசிஃபாவுடன் இதற்காக துபாய் சென்றிருந்த இர்ஃபான், அங்கு சிசுவின் பாலினம் தொடர்பாக தான் பெற்ற விவரத்தை, வீடியோ கண்டெட்டாக்கவே, தற்போது சர்ச்சைக்குள் சிக்கியிருக்கிறார்.
இதை அறிந்தும் Youtuber இர்ஃபான் அச்செயலில் ஈடுபட்டிருந்ததால், தமிழ்நாடு மருத்துவதுறை அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளது. மேலும் ‘குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்தியது ஏன்?’ என்ற கேள்வியையும் இர்ஃபானிடம் சுகாதாரத்துறை கேட்டுள்ளது.
மேலும் இர்ஃபான் தன் யூ-ட்யூப் பக்கத்திலிருந்து சம்பந்தப்பட்ட வீடியோவை நீக்க வேண்டும் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “You tuber இர்பான் என்பவர் தான் துபாய் சென்ற போது தனது மனைவியின் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை (பெண்) என்று ஸ்கேன் பரிசோதனை செய்து தெரிந்து கொண்டதாகவும் அதனை குடும்ப நிகழ்ச்சி ஒன்றின் போது அங்கு குழுமியிருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். அந்த நிகழ்வினை ஒளிப்படமாக எடுத்து 19.05.2024 அன்று தனது You tube Channel-ன் மூலம் வெளியிட்டுள்ளார். அதனை இதுவரை பல பார்வையாளர்கள் உலகம் முழுவதும் பார்த்தும் பகிர்ந்தும் உள்ளனர்.
இந்தியாவில் சிசுவின் பாலினம் அறிவதும் அறிவிப்பதும் பாலின 1994 PCPNDT ACT 1994, Central Act 57 of 1994-ன் படி தடை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை
இத்தகைய செயலால், தமிழ்நாடு மட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறையும். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகும் வாய்ப்புள்ளது.
எனவே, இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்களின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, மாநில அமலாக்க அலுவலர் (PCPNDT ACT 1994) மற்றும் இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அவர்களால் திரு இர்பான் அவர்களுக்கு 21.05.2024 அன்று பாலினத் தேர்வை தடை செய்தல் சட்ட விதிகளை மீறியதற்காக குறிப்பானை சார்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இர்பான் அவர்களால் வலையொளி செய்யப்பட்ட ஒளிப்படத்தினை சமூக வலைதளங்களிலிருந்து உடனடியாக நீக்கிட வலையொளி தனத்திற்கும், கணிணி குற்றம் (Cyber Crime)பிரிவிற்கும் 21.05.2024 நாளிட்ட கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருவின் பாலினம் அறிவதும் அறிவிக்கும் செயலில் ஈடுபடும் நபர்கள் ஸ்கேன் சென்ட்டர்கள், மருத்துவமனைகள் மீது இந்த அரசு கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் சுகாதாரத்துறை அனுப்பிய நோட்டீஸ் கிடைக்கவில்லை என்றும், நோட்டீஸ் கிடைத்தபின்னர் பதிலளிக்கிறேன் என்றும் இர்ஃபான் புதிய தலைமுறைக்கு தெரிவித்துள்ளார்.
“விளம்பர நோக்கத்தில் மட்டும்தான் இந்த வீடியோவை எடுத்தாரா என்கிற விளக்கத்தை இர்பான்தான் கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கலாம். சட்டம் தனது கடமையை செய்யும்.
இவ்விஷயத்தில் குழந்தையை கருக்கலைப்பு செய்யும் நோக்கத்தில் வீடியோ வெளியிடப்படவில்லை என்றே தெரிகிறது. மட்டுமன்றி கருக்கலைப்பு செய்வதற்கு குறிப்பிட்ட சில வாரங்கள் உள்ளன. இர்ஃபான் விவகாரத்தை பொருத்தவரை அவர் மனைவி கருவுற்று ஆறு மாதங்கள் கடந்து விட்டன. அக்கருவின் பாலினத்தையும் அவர் இந்தியாவில் அறியவில்லை. வெளிநாட்டில் அறிந்திருக்கிறார். இதுவரை இதுபோன்ற பிரச்னைகள் நமக்கு வந்ததில்லை.
பாலினத்தை அறிவதும், வெளிப்படுத்துவதும் இந்தியாவில் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது.
ஆகவே ‘பாலியல் தேர்வு தடை’ சட்டம், 1994-ன் கீழ் இர்ஃபான் மீது நடவடிக்கைகள் எடுக்க முடியுமா, அதற்கு சாத்தியங்கள் உள்ளனவா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த சட்டம் இந்தியாவில் அமலுக்கு வந்து 30 வருடங்கள் ஆகின்றன. இந்த சட்டத்தினால் ஏற்பட்ட பலன் என்ன என்பது குறித்த ஆய்வு இல்லை. எதிர்பார்த்த அளவிற்கு பெண் குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த 30 வருடங்களில் அதிகரிக்கவில்லை. இந்த சட்டத்தில் நிறைய குறைகள் ஓட்டைகள் இருக்கின்றன. அதனால் சட்டம் கொண்டுவரப்பட்ட நோக்கத்திற்கான பலன் நிறைவேற்றப்படவில்லை.
பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்கு பாலினத்தை வெளிப்படுத்துவது மட்டும் போதுமானது என ஆட்சியாளர்கள் நம்பிக் கொள்கிறார்கள். உண்மைநிலை அப்படியல்ல.
சாந்தி ரவீந்திரநாத்
பாலின சமத்துவத்தில் இந்தியாவின் தரம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதை மேம்படுத்த ஆட்சியாளர்கள் உழைக்க வேண்டும். இப்படியான ஒரு சிலரை தண்டிப்பது மட்டும் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றாது. ‘எனது வயிற்றில் இருக்கும் குழந்தை பெண் குழந்தை’ என்பதை பெருமையாக கூறும் விஷயத்தை நாம் மதிக்க வேண்டும்” என்றார்.
இன்னும் பலரும்கூட இர்ஃபான் வீடியோ வெளியிட்டது இந்திய அரசமைப்பின்படி குற்றம் என்றாலும்கூட, அவரின் நோக்கத்தில் தவறில்லை என்கின்றனர். இர்ஃபான், பெண் குழந்தை என்பதை கொண்டாடும் நோக்கத்தில் வீடியோவை வெளியிட்டிருக்கிறார் என்றே வைத்துக்கொள்ளலாம். ஆனா அதையும் அரசு கண்டிப்பது ஏன்? இதை அறிய தடை சட்டம் இயற்றப்பட்டதன் நோக்கத்தையும் இந்தியாவின் சில அதிர்ச்சிகர தரவுகளையும் நாம் உணர வேண்டும்.
இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறை அவர்களின் பிறப்புக்கு முன்பிருந்தேவும் ஆரம்பித்துவிடுகிறது. சாதி, வகுப்பு, சமூகம், வாழும் இடம் என எல்லாவற்றையும் தாண்டி, பிறக்கும் முன்பே அல்ட்ரா-சோனிக் வடிவில் பெண் குழந்தைகள் கொல்லப்படுகின்றனர் என்பதுதான் இந்தியாவின் இன்றைய நிலை. இது ஒப்பீட்டளவில் குறைந்திருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை; ஆனால் இன்னும் ஒழியவில்லை.
இதை எடுத்துக்காட்டுவதாக, 2007-ல் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 903 பெண் குழந்தைகளாக இருந்தது, 2016-ல் இது 877 ஆகக் குறைந்துவிட்டது. நான்கு மாநிலங்களில் பாலின விகிதம் 840-க்கும் குறைவாகவே இருக்கிறது. அதன்படி ஆந்திரம், ராஜஸ்தான் இரண்டிலும் 806, பிஹாரில் 837, உத்தராகண்டில் 825, தமிழ்நாட்டில் 840 என்றும் உள்ளது.
பிறந்த குழந்தைகளைக் கொல்வது குறைந்திருக்கிறது என்றாலும் கருவில் இருக்கும்போது ஸ்கேன்செய்து கண்டறிந்து, அது பெண் கரு என்று தெரிந்தால் அழித்துவிடுவது தொடரத்தான் செய்கிறது. இதில் கிடைக்கும் தரவுகளும் குறைவாகவே உள்ளது. காரணம், அதில் தாய்க்கு பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே அது வெளிச்சத்துக்கு வருகிறது. இல்லையென்றால், குடும்பத்துக்குள்ளேயே முடிந்துவிடுகிறது.
இப்படி கருக்கலைப்பு செய்யும் அனைவருமே, பாதுகாப்பற்ற கருக்கலைப்பையே மேற்கொள்கின்றனர் என்பது இன்னும் அதிர்ச்சிகர விஷயம். அதனால்தான் அது வெளிச்சத்துக்கு வருவதில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. எப்போதாவது ‘ஸ்கேன் செண்டரை மூடினோம், அதை நடத்தியவர்களை கைது செய்தோம்’ என்று மட்டுமே செய்தி வரும். மற்றபடி எத்தனை பெண் சிசு கருக்கொலைகள் அங்கே நடந்தன என்பது நமக்கு சரியாக தெரிவதில்லை பெரும்பாலும்.
இதையெல்லாம் தடுக்கவே 1994-ம் ஆண்டு ‘பிறப்புக்கு முன்பே பாலினம் கண்டறிதல் (பாலின தேர்வு தடைச்சட்டம்)’ என்ற சட்டம் அமலுக்கு வந்தது.
இந்த இடத்தில்,
என்பதை நாம் உணர வேண்டும். கருக்கலைப்புக்கு காரணம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உதாரணத்துக்கு தாயின் உடல் மற்றும் மனநல சிக்கல்கள், சிசுவின் உடல் வளர்ச்சி சிக்கல்கள் போன்று... ஆனால் பெண் சிசுவை கருவிலேயே அழிப்பது வேறு. இதில், பெண் என்பதால் மட்டுமே அந்த சிசு அழிக்கப்படுகிறது. ஆகவே இரண்டையும் நாம் ஒப்பிடுவதே தவறாகிவிடும்.
இந்த காரணத்தினாலேயே இன்றளவும்
இதற்கான சட்டத்தை இந்திய அரசு அமல்படுத்தியப்பிறகும், குழந்தை பிறந்தபின் சில மாதத்திலேயே அதை கொலை செய்த சமூகம்தான் இந்தியச் சமூகம்.
இதுபோன்ற காரணங்களால்தான், இன்றளவும் பாலின தடை சட்டம் கடுமையாக பின்பற்றப்படுகிறது. இதை அறியாமல், இர்ஃபான் போன்ற சிலர் ஆர்வக்கோளாறாக வீடியோ மூலம் ‘பாலினம் அறிதலை அண்டை நாட்டில் செய்தோம், இங்கு வீடியோ மட்டுமே வெளியிட்டோம்’ தொணியில் செயல்படுவது வேதனைதான்.
முன்பே சொன்னதுபோல பெண் சிசுக்கொலைகளுக்காகவது இங்கு முறையான தரவுகள் இருக்கின்றன, கருவிலேயே பாலினத்தை கண்டறிந்து சிசுவை கொல்வதற்கு பெரியளவில் தரவுகளே இல்லை. நிலைமை அப்படியிருக்க,
‘பெண் குழந்தைகள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்; பெண் பிள்ளைகள் பெறுவதை நார்மலைஸ் செய்ய வேண்டும்’ என்ற நோக்கத்தில்தான் இர்ஃபான் இப்படி செய்தார் என பலர் சொல்லி கேட்க முடிகிறது. அவர்களுக்காக, சில விஷயங்கள்...
* இங்கே ஆரோக்கியமாக ஒரு குழந்தை பிறப்பதை நம்மாட்கள் முதலில் நார்மலைஸ் செய்ய வேண்டும். அதிலும் குழந்தை பிறப்பில் தாய் - சேய் என இருவரின் நலனிலும் அக்கறை கொள்ள வேண்டும் என்பதை நார்மலைஸ் செய்ய வேண்டும்.
* கர்ப்ப காலத்திலுள்ள மனைவியை அன்பாக கணவன் பார்த்துக்கொள்வதை நார்மலைஸ் செய்ய வேண்டும்.
* உடலாலும் மனதாலும் பல பிரச்னைகளையும் மாற்றங்களையும் பேறு காலத்தில் எதிர்கொள்ளும் பெண்களை எப்படி கையாள்வது என்பதை குடும்பங்கள் நார்மலைஸ் செய்ய வேண்டும்
* எந்த பாலின குழந்தையாக இருந்தாலும், குழந்தையை கொண்டாடுவோம் என்ற மனநிலையை பெருக்க ஒவ்வொரு தனிநபரும் பல்வேறு வகைகளில் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வளவு ‘நார்மலைஸ்’களை செய்த பிறகு, பாலினம் அறிவதை கொண்டாடும் மனநிலையை இந்தச் சமூகம் பெறட்டும். அதுவரை, இர்ஃபான் மாதிரியான பல மில்லியன் ஃபாலோயர்களை கொண்ட ஒரு இந்தியர் ‘பாலினம் அறியும்’ சோதனையை ‘வெளிநாட்டுக்கு’ சென்று தெரிந்துகொண்டு, அதை ‘இந்தியாவில்’ சர்வசாதாரணமாக அறிவிப்பது, நிச்சயம் தவறுதான்! அதை அவர் அறிந்து செய்தாலும், அறியாமல் செய்தாலும் அவரை பின்தொடரும் பலருக்கும் மோசமான உதாரணமாகத்தான் அமையும்.