மதுரையில் கடந்த சில நாட்களாகவே தெருநாய்கள் தண்ணீர் குடிக்க முயன்று பிளாஸ்டிக் குடத்திற்குள் தலை மாட்டிக்கொண்டு தெருக்களில் சுற்றிவரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், மதுரை திருநகர் பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று நெகிழி டப்பாவில் தலை மாட்டியபடி பத்து நாட்களுக்கு மேலாக அப்பகுதியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சுற்றி வந்துள்ளது.
தொடர்புடைய செய்தி: மதுரை: குடத்திற்குள் தலை மாட்டி ஒருவாரமாக உயிருக்கு போராடிய நாய்: மீட்ட நபருக்கு பாராட்டு
இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஊர்வனம் விலங்குகள் பாதுகாப்புக்குழுவை சேர்ந்த இளைஞர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அக்குழுவை சேர்ந்த சீனிவாசன், வித்தோஷ் உள்ளிட்ட இளைஞர்கள் நெகிழி டப்பாவினுள் தலை சிக்கிய படி சுவாசிக்க முடியாமல் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தெருநாயை வலைவீசி பிடித்ததோடு, தெருநாயின் தலையில் மாட்டிக்கொண்டிருந்த நெகிழி டப்பாவை கட்டிங் பிளேட் உதவியுடன் லாவகமாக அகற்றினர்.
பல நாட்களாக சுவாசிக்க சிரமப்பட்ட படி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தெருநாயின் தலையில் இருந்து நெகிழி டப்பா அகற்றப்பட்டதும் மகிழ்ச்சியில் நாய் துள்ளிக்குதித்து ஓடியது. பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தெருநாயை பிடித்து அதன் தலையில் மாட்டியிருந்த நெகிழி டப்பாவை அகற்றிய இளைஞர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.