ஊரடங்கால் உணவின்றி தவித்த குரங்குகள்.. கருணை காட்டிய இளைஞர்கள் : குவியும் பாராட்டு..!

ஊரடங்கால் உணவின்றி தவித்த குரங்குகள்.. கருணை காட்டிய இளைஞர்கள் : குவியும் பாராட்டு..!

ஊரடங்கால் உணவின்றி தவித்த குரங்குகள்.. கருணை காட்டிய இளைஞர்கள் : குவியும் பாராட்டு..!
Published on

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கோவில்கள் மூடப்பட்டதன் எதிரொலியாக, தீர்த்தமலையில் உணவின்றி தவிக்கும் குரங்குகளுக்கு, தன்னார்வ அமைப்பு இளைஞர்கள் தினமும் பழங்களை வழங்கி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே தீர்த்தமலை கிராமத்தில் அமைந்துள்ளது வரலாற்று புகழ்பெற்ற ராமாயண கால தொடர்புடையதாக கருதப்படும் தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலுக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சென்று வழிபட்டு வருகின்றனர்.

இக்கோயிலின் வழிநெடுகிலும் உள்ள 500-க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு, தினம்தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தாங்கள் கொண்டுவரும் பொறி, கடலை தண்ணீர் உள்ளிட்ட உணவுப் பொருட்களை கொடுப்பது வழக்கம். அதை உண்டு அந்தக் குரங்குகள் தங்கள் வயிற்றுப் பசியை நிரப்பிக் கொண்டு வந்தது. ஏற்கனவே வறட்சி ஒருபுறம் வாட்டி எடுக்க, தற்பொழுது மறுபுறம் கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவால் பக்தர்கள் வருகை இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது தீர்த்தகிரீஸ்வரர் கோயில். சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வராத நிலையில் அங்கிருக்கும் குரங்குகள் தற்பொழுது உணவின்றி தவித்து வருகின்றன.

இந்த ஊரடங்கு உத்தரவால் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு போதிய வசதிகளை அரசு செய்து வந்துள்ளது. இதனால் மக்கள் எந்தவித சிரமமுமின்றி அன்றாடம் உணவு சமைத்து உண்டு வருகின்றனர். ஆனால் மலைக்கோயிலுக்கு பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் செல்லாத நிலையில் தற்பொழுது உணவின்றி குரங்குகள் தவிர்த்து வருவது கண்டு அந்த பகுதியில் உள்ள நமது தீர்த்தமலை என்ற தன்னார்வ குழுவினர் குரங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த குரங்குகளுக்கு உணவாக வாழைப்பழம், தக்காளி, முலாம் பழங்களை வாங்கி வழங்க வேண்டுமென திட்டமிட்டுள்ளனர். முதல் நாள் அருகிலுள்ள விவசாய நிலங்களுக்குச் சென்று தக்காளி பழங்களை வாங்கி வந்து மலையிலுள்ள குரங்குகளுக்கு வழங்கினர். இதனிடையே தீர்த்தமலை அருகில் இருந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தில் அறுவடைக்கு வந்துள்ள முலாம் பழங்கள் அனைத்தும் ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில் அதை குரங்களுக்கு வழங்க முன் வந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து தன்னார்வ அமைப்பினர் தினமும் சுமார் 400 கிலோ அளவில் முலாம் பழங்களை விவசாய நிலங்களில் இருந்து அறுவடை செய்து, தீர்த்த மலை மீது உள்ள குரங்குகளுக்கு கொடுத்து வருகின்றனர். அதேபோல், தண்ணீரை எடுத்து ஆங்காங்கே குரங்குகளுக்கு வைத்து வருகின்றனர். இவர்கள் மட்டுமல்லாது அந்த பகுதியில் உள்ள கிராம மக்களும் குரங்குகளின் நிலையை அறிந்து வீடுகளிலிருந்து தயிர்சாதம் போன்ற உணவு வகைகளை தயார் செய்து மலைமீதுள்ள குரங்குகளுக்கு வைக்கத் தொடங்கியுள்ளனர். நமது தீர்த்தமலை என்ற தன்னார்வ அமைப்பு இளைஞர்களின் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com