தென்பெண்ணை ஆற்றில் சடங்கு நிகழ்ச்சிக்கு வந்த இளைஞர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டநிலையில், தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு தீயணைப்பு துறையினர் அவரை சடலமாக மீட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மஞ்சமேடு தெண்பெண்ணை ஆற்றங்கரையோரம் ஸ்ரீ மாதேஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இவ்வாற்றிற்கு தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு காரணங்களுக்காக நீராட வருவது வழக்கம். அந்த வகையில் தருமபுரி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (27) என்பவர் தனது நண்பரின் தந்தையின் ஈமச்சடங்கிற்காக நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் வந்திருந்தார்.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் குளிப்பதற்காக சென்ற அரவிந்த், பழைய பாலத்தில் இருந்து இரண்டு முறை டைவ் அடித்ததாகவும், மூன்றாவது முறை அடித்தபோது ஆற்றில் அடித்து செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. டைவ் அடித்து உள்ளே சென்றவர் மீண்டும் வராததால் உறவினர்கள் அச்சமடைந்து, போச்சம்பள்ளி தீயணைப்பு துறைக்கும், பாரூர் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர்.
அதன் பேரில் வந்த சீனிவாசன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் சுமார் 6 கி.மீ. தூரம் வரை நேற்று மாலை வரை தேடினர். இன்று காலை மீண்டும் இரு பரிசல்கள் மற்றும் டிரோன் கேமராக மூலம் தேடுதல் பணியை தொடர்ந்தனர். அப்போது கரை ஒதுங்கிய நிலையில் சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அங்கு பரிசல் மூலம் சென்று உடலை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து பாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.