சீர்காழியில் கடந்த வாரம் வலையில் சிக்கிய பாம்பை மீட்க முயன்றவர் பாம்பு கடித்து உயிரிழந்த நிலையில், இளைஞர் ஒருவர் பாம்புடன் சாகசங்களை நிகழ்த்தி விடியோ வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவைச் சேர்ந்த அரவிந்த் என்பவரது வீட்டின் பின்பகுதியில் கடந்த வாரம் பாம்பு ஒன்று சிக்கியது. இரண்டு நாட்களாகியும் பாம்பு அங்கேயே இருந்ததால், வீட்டின் உரிமையாளர் புளிச்சக்காடு பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் இளைஞர் தினேஷ் என்பவரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த தினேஷ் பாம்பை மீட்டதுடன், சிறிது நேரம் பாம்பை வைத்து சாகசங்களைக் காட்டியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இளைஞரின் முயற்சியைச் சிலர் பாராட்டினாலும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காரணம் கடந்த வாரம் அருகில் உள்ள ஆர்ப்பாக்கம் கிராமத்தில் வலையில் சிக்கிய பாம்பை மீட்க முயன்ற இளைஞர் ஒருவர் அதே பாம்பு கடித்தே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தச் சம்பவம் முடிந்த அடுத்த வாரமே இளைஞர் ஒருவர் சாகச வீடியோ வெளியிட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மக்கள் கூறும் போது “ இளைஞர்கள் பாம்புடன் சாகச விளையாட்டுகளை விளையாடுவதால் அடிக்கடி உயிரிழப்பு அபாயம் ஏற்படுகிறது.ஆகவே இனி வரும் காலங்களில் வனத்துறை மட்டுமே பாம்புகளை மீட்க வேண்டும் என்றும் இது போன்று இளைஞர்கள் வீடியோ வெளியிடுவதைத் தடை செய்ய வேண்டும்” என்றும் கூறினர்.