திருச்சி மாவட்டம், மணப்பாறையை அருகே உள்ள மஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் (45). இவர் தொண்டு நிறுவனமும், கோவில்பட்டி சாலையில் ஸ்டேஷ்னரி கடையும் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய நண்பர், பாண்டிச்சேரியை சேர்ந்த சேகர் (42). சேகர், ஞானப்பிரகாசத்தின் தொண்டு நிறுவனத்தில் இயக்குநராக இருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது சேகர் பாண்டிச்சேரி மாநில பா.ஜ.கவில் மாநில அறிவுசார் பிரிவு இணை அமைப்பாளராக உள்ளார்.
இந்தநிலையில் சேகரிடம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு 5 லட்சத்தை ஞானப்பிரகாசம் கடனாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த பணத்தை சேகர் பலமுறை திருப்பிக் கேட்டும் அந்த தொகையை ஞானப்பிரகாசம் திருப்பி தரவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சேகர் மணப்பாறைக்கு வெள்ளை நிற காரில் வந்து கடையிலிருந்த ஞானப்பிரகாசத்தின் மகன் எபினேசன் (22) என்பவரைக் கடத்திச் சென்றுள்ளார். இதையடுத்து மகனை காணவில்லை என தந்தை ஞானப்பிரகாசம் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது வெள்ளை நிற காரில் வாலிபரைக் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து மணப்பாறை இன்ஸ்பெக்டர் கோபி தலைமையிலான தனிப்படை காவலர்கள் செல்போன் சிக்னலை வைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாண்டிச்சேரியிலிருந்த சேகரைத் தனிப்படை போலீசார் கைது செய்தனர். கடத்தப்பட்ட வாலிபரையும் பத்திரமாக மீட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் சேகரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை வாங்கிய கடனுக்காக மகன் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.