செய்தியாளர் சுரேஷ்குமார்
தாய்-தந்தை, இரண்டு மகன்கள் என திருவொற்றியூர் திருநகர் பகுதியில் அழகாக இருந்த சிறிய குடும்பத்தை சிதைத்துவிட்டது இரட்டைக் கொலை சம்பவம்.. குடும்பத்தை காக்க சொந்த ஊரையும், உறவுகளையும் விட்டுவிட்டு கடல் கடந்து சென்று ஓமனில் வெல்டராக பணியாற்றி வருகிறார் முருகன். அவரது மனைவி பத்மா, சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
மூத்த மகன் நித்தேஷ் பி.எஸ்.சி மூன்றாமாண்டும், இளைய மகன் சஞ்சய் 10ஆம் வகுப்பும் படித்து வந்தனர். கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஓமனில் இருந்து வந்து குடும்பத்தினருடன் இருந்துவிட்டு சென்றுள்ளார் முருகன். இந்நிலையில் திடீரென மூத்த மகன் நித்தேஷிடமிருந்து, அவரது பெரியம்மாவின் மகளுக்கு வாட்ஸ் அப் தகவல் சென்றுள்ளது. "அம்மாவையும், தம்பியையும் கொலை செய்துவிட்டேன்.. வீட்டு சாவியும் செல்போனும் உங்கள் வீட்டு வாசலில் உள்ளது..." என அதில் இருந்துள்ளது. நித்தேஷிடமிருந்து வந்த தகவலை பார்த்ததும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
விரைந்து அவர்கள் வீட்டுக்கு சென்று வீட்டின் பூட்டை திறந்து பார்த்தபோது முழுவதும் ரத்தக் கறை. வரவேற்பு அறையில் இரண்டு பெரிய பிளாஸ்டிக் பைகளில் பத்மாவும், சஞ்சய்யும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலங்களாக கிடந்தனர்.
உறவினர் ராஜேந்திரன் இதுதொடர்பாக கூறுகையில், “வீட்டில் அவர்கள் 3 பேர்தான் இருக்கின்றனர். வேறு யாரும் இல்லை. அருகில் உறவினர்கள்தான் இருக்கின்றனர். ஆனால் சத்தம் ஏதும் கேட்கவில்லை. அன்று மழை பெய்தது; இடி இடித்தது. மது அருந்தும் பழக்கமோ, போதைப் பழக்கமோ ஏதும் இருந்தால் இப்படி நடந்துவிட்டதாக சொல்லலாம். ஆனால் அந்த பையனுக்கு எந்த பழக்கமும் இல்லை. இங்கேயேதான் இருப்பார். டிவி பார்ப்பார், செல்போனைப் பார்ப்பார். காலேஜ்ஜுக்கு செல்வார். அவ்வளவுதான். கெட்டபழக்கங்கள் ஏதும் கிடையாது” என தெரிவித்தார்.
தாய்-தம்பியை கொலை செய்வதற்காக 3 மாதங்களாக திட்டமிட்டு, கத்தியையும், பெரிய பிளாஸ்டிக் பைகளையும் நித்தேஷ் வாங்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
உறவினர் ரமேஷ் கூறுகையில், “இப்போதுவரை அவர்தான் செய்தாரா என்ற நம்பிக்கையே இல்லை. அவர் அப்படி செய்தார் என்பதையே புரிந்துகொள்ள முடியவில்லை” என்றார். நித்தேஷை தேடி வந்த காவல்துறையினர், திருவொற்றியூர் கடற்கரையில் அவரை கைது செய்தனர். விசாரணையில் நித்தேஷ் தெரிவித்த காரணம், அனைவரையும் திடுக்கிடச் செய்தது.
சரியாக படிக்காமல் கல்லூரியில் 10க்கும் மேற்பட்ட பாடங்களில் அரியர் வைத்திருந்ததாகவும், இதனால் தினமும் தாய் திட்டிக் கொண்டே இருந்ததால் அவரை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதிகாலையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தாய் பத்மாவை கத்தியால் குத்தி கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
எனில் தம்பியை கொல்ல என்ன காரணம்? என விசாரித்தபோது, தாய் இல்லாமல் தம்பி, தனியாக இருப்பான் என்பதால் அவனையும் கொலை செய்ததாக கூறியுள்ளான் நித்தேஷ். பின்னர் தற்கொலை செய்துகொள்ள எண்ணியபோது, பயமாக இருந்ததால் கடற்கரையில் தஞ்சம் அடைந்ததாகவும் நித்தேஷ் கூறியுள்ளார்.
படிக்கவில்லை என்றால் பெற்றோர் கண்டிக்கத்தானே செய்வார்கள்.. இதற்காகவா கொலை என்பது அப்பகுதி மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது.