சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள அடைக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவர் லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவருக்குக் கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு கனகா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவி இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்தநிலையில், 2வது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த வினோத் பல இடங்களில் பெண் பார்த்துள்ளார். அப்போது ஒரு இடத்தில் 16 வயது சிறுமியைப் பார்த்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர்கள் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டு, இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
இதனையறிந்த, அதே பகுதியைச் சேர்ந்த சமூகநல ஆர்வலர்கள் சிலர், குழந்தை திருமணம் குறித்து சேலம் சமூக நலத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், சமூக நலத்துறை அதிகாரிகள் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த, போலீசார் வினோத்தைக் கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், ஏற்கனவே வேறு ஒரு பெண்ணுடன் முதல் திருமணம் நடந்து 2 குழந்தைகள் உள்ளதும், தற்போது இரண்டாவதாக 16 வயது சிறுமியைத் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்ததும் தெரிய வந்ததுள்ளது.
இதையடுத்து வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், சேலம் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனர்.