பயன்பாடற்ற ஃபிளக்ஸ் பேனர்களை மீள் உருவாக்கம் செய்யும் பணியில் இளைஞர்கள் இருவர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பேனர்களைக் கொண்டு ரெயின் கோட் தயாரித்து ஏழை, எளிய மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
திருவிழா, விசேஷங்கள், கட்சிக்கூட்டங்கள், திரைப்பட வெளியீடு காலங்களில் பேனர்கள் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றுள்ளன. வைக்கும் பொழுது கம்பீரமாக இருக்கும் பேனர்கள் நாளடைவில் உபயோகமற்றதாகிவிடுகின்றன. அதுவும் தடைவிதிக்கப்பட்ட பிறகு பயன்பாடற்று போன பேனர்கள் ஏராளம்.
அப்படி பயன்பாடற்றுபோன பேனர்களை ரெயின் கோட்டாக வடிவமைத்து மீள் உருவாக்கம் செய்கின்றனர் சென்னையில் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் இளைஞர்களான அப்துல் மற்றும் சக்தி. அப்படி உருவாக்கும் ரெயின் கோட்டுகளை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
விலை கொடுத்து வாங்க முடியாத தங்களை போன்றோருக்கு இப்படி வழங்கப்படும் ரெயின்கோட் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்கிறார் சாலையோரம் உணவுக்கடை நடத்திவரும் ராஜ்குமார். பயன்பாடற்று போகும் பேனரை பயனுள்ளதாக மாற்றிக் கொடுக்கும் இளைஞர்களின் முயற்சி பாராட்டத்தக்கது என்றும் ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படும் இந்த இளைஞர்களின் சேவை தொடர வேண்டுமெனவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.