பிப்ரவரி என்றாலே, பலருக்கும் சட்டென்று தோன்றுவது காதலர் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் இந்தத் தினத்தை கொண்டாடி வருகிறார்கள் காதலர்கள். இந்தியாவை பொறுத்தளவில் ஆதரவைவிட அதிகம் சர்ச்சையை எழுப்பும் நாளாக இது இருப்பது ஒரு துரதிருஷ்டம். இந்த நாளை எதிர்த்து கழுதைக் கல்யாணம், நாய் கல்யாணம் எனப் பலபோராட்டங்களுக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் உலக அளவில் இந்த நாள் ஒரு இனிய நாள். குறிப்பாக இளைஞர்களுக்கு இந்த நாள் மறக்க முடியாத நாள்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த பிப்ரவரி மாதத்தில் அவரவர் தங்களின் காதலை வெளிப்படுத்த வேண்டி காத்து கொண்டிருப்பார்கள். அதற்காக முன்கூட்டியே ஒரு திட்டம் வைத்திருப்பார்கள். இந்த நாள் ஏதோ இளம் காதல் ஜோடிகளுக்கான நாள் எனப் பலர் தவறாக நினைத்து கொண்டுள்ளனர். ஆனால் அப்படியல்ல; முதுமையான காலத்திலும் மறக்க முடியாத இளம்வயது பசுமை காதல் நினைவுகளை மனத்தில் தாங்கிக் கொண்டிருப்பவர்களுக்கும் இந்த நாள் ஒரு இனிமையான நாள்தான். இந்த நாளின் அடிப்படை என்பது அன்புதான்.
பல வருடங்களுக்கு முன்பு காதலர் தினம் என்றால் வாழ்த்து அட்டைகளும் ரோஜா பூக்களுமே அதிகம் விற்பனையாகும். காதலர்கள் தனது காதலிக்கு என்ன பரிசுப் பொருட்களை வழங்கலாம் என ஒரு பட்டியல் போடுவார்கள். அந்தப் பட்டியலில் முதல் இடத்தில் நிச்சயம் ரோஜா பூதான் இருக்கும். அடுத்து ஒரு வாழ்த்து அட்டை. இந்த இரண்டிற்கும் பிறகுதான் வேறு எந்தப் பொருளும் இடம் பிடிக்கும்.
ஆனால் இன்று அந்த நிலை மலையேறிவிட்டது. நாகரிக வளர்ச்சி மற்றும் மேல்நாட்டு வணிகம் போன்றவற்றின் வருகையால் பல்வேறு வகையான பரிசுப் பொருட்கள் சந்தைக்கு வந்து விட்டன. அதற்கேற்றபடி வியாபாரிகளும் தங்கள் கடைகளில், அனைவரின் விருப்பத்திற்கு ஏற்ப பொருட்களை காட்சிப்படுத்தி வருகின்றனர். அதுவும் இந்தக் கொண்டாட்டம் பிப்ரவரிமாதத்திற்கு முன்பே களைகட்ட ஆரம்பித்து விடுகிறது.
குறைந்த விலையுள்ள பொருட்களிலிருந்து அதிக விலைமதிப்புள்ள பொருட்கள் வரை வியாபாரிகள் கடை முழுக்க நிரப்பி விடுகின்றனர். ஆன்லைன் விற்பனையில் மக்களின் ஆர்வம் அதிகரித்து உள்ளதால், கடைக்குச் சென்று பொருட்களை வாங்கும் பழக்கம் என்பது குறைந்து கொண்டே வருகிறது. அதற்கெல்லாம் மக்களிடம் நேரம் இருப்பதில்லை.
மனதிற்கு பிடித்தவர்களுக்கு என கொஞ்ச நேரத்தைகூட செலவிட முடியாமல், மக்கள் எந்திரமாகிவிட்டனர். அதனால் கடைசியாக ஒப்புக்கு ஒரு பரிசுப் பொருளை வாங்கி கொடுத்து விருப்பத்தை பூர்த்தி செய்துவிடுகிறார்கள். உண்மையில், நாம் நேசிப்பவருக்கு விரும்பி ஒரு பொருளை வாங்கி கொடுத்து, தம் அன்பை வெளிப்படுத்துவதை விட, வேறு விஷயங்கள் எதுவும் பெரிதில்லை.