கால்கள் செயலிழந்தமையால் வறுமைக்கு தள்ளப்பட்ட இளைஞர் - வேலைவாய்ப்பு கேட்டு கோரிக்கை

கால்கள் செயலிழந்தமையால் வறுமைக்கு தள்ளப்பட்ட இளைஞர் - வேலைவாய்ப்பு கேட்டு கோரிக்கை
கால்கள் செயலிழந்தமையால் வறுமைக்கு தள்ளப்பட்ட இளைஞர் - வேலைவாய்ப்பு கேட்டு கோரிக்கை
Published on

18 வயதேயாகும் இளைஞரொருவருக்கு விபத்தின் காரணமாக கால்கள் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தன் சுய பராமரிப்புக்கே பொருளாதார வழியின்றி அவர் போராடி வருகிறார். கொடைக்கானலை சேர்ந்த அந்த இளைஞர், தனக்கு யாராவது உதவிக்கரம் நீட்டவேண்டுமென அரசுக்கும் தொண்டு நிறுவனத்துக்கும் கோரிக்கை வைக்கிறார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரகாசபுரம் பகுதியில் வசித்து வரும், 18 வயது இளைஞர் செல்வகுமார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் வாகனத்தில் செண்பகனூர் பகுதியில் வாகனத்தில் செல்லும் பொழுது விபத்தில் சிக்கி உயிர் பிழைத்துள்ளார். உயிர் பிழைத்தாலும், விபத்தால் படுகாயமடைந்த காரணத்தால் அவரது இடுப்புக்கு கீழ் உள்ள நரம்புகள் சேதமடைந்து, இடுப்புக்கு கீழே செயல்படமுடியாமல் போயுள்ளது. இதனால் அவரின் கால்கள் இரண்டும் செயலிழந்துள்ளது. அன்று முதல் படுத்த படுக்கையான அவர், தற்போதுவரை அவதியுடன் வசித்து வருகிறார்.

தான் படித்து வேலைக்கு சென்றால் மட்டுமே சொற்ப சம்பளத்திற்கு தினக்கூலி வேலைக்கு செல்லும் தாயாரின் நிலையை மாற்ற முடியும் என எதிர்ப்பார்த்திருந்த அவருக்கு, கால்கள் இயங்காமல் போனது பேரிடியாக இருந்துள்ளது. ‘என் தாய்க்கு இனி எப்படி என்னால் ஆதரவளிக்க முடியும்?’ என வேதனையுறும் செல்வகுமாரை நம்பியே அவருடைய 10 ஆம் வகுப்பு படிக்கும் தங்கையும் இருக்கிறார்.

கால்கள் செயலிழந்தமையால், தற்பொழுது முடங்கி கிடப்பதாக வேதனை தெரிவிக்கும் செல்வகுமார், தனக்கு நன்றாக கணிணி இயக்கத்தெரிந்த நபர் என்பதால் தற்போதைக்கு இணைய வழியாக தனது படிப்பை தொடரவிருப்பதாக தெரிவிக்கிறார். மேற்கொண்டு தன் படிப்பிற்கு ஏற்ற இடத்தில் அரசு சார்பிலோ, தொண்டு நிறுவனங்கள் சார்பிலோ ஏதேனும் வேலை வாய்ப்பு செய்து தரப்பட்டால் தனக்கு உதவியாக இருக்குமென்கிறார் செல்வகுமார்.

பிசியோதெரபி சிகிச்சை உதவியுடன், தனது கால்களை மீண்டும் செயலுக்கு கொண்டுவர முடியுமென மருத்துவர்கள் கூறியிருப்பதை முன்னிறுத்தும் அவர், சிகிச்சைக்கு பணமின்றி அவதிப்படுவதாகவும், அதற்கான உதவிகள் கிடைத்தாலும் நன்றாக இருக்குமென்றும் தெரிவித்துள்ளார். தனக்கு வேலை கிடைக்கும்பட்சத்தில் தன் குடும்பத்தின் அடிப்படை தேவைகளுக்கான வருமானத்தையும் ஈட்ட பாடுபடுவேன் என நம்பிக்கை கூறுகின்றார் அவர்.

படுத்த படுக்கையிலேயே வாழ்வதால், நாள் ஒன்றிற்கு 100 ரூபாய் வரை தனது உடல்கழிவுகளை முறையாக வெளியேற்றி பராமரிக்க பொருளாதாரம் தேவைப்படுவதாகவும், ஆனால் அதற்கு கூட வருமானம் இல்லாமல் தனது தாயார் கவலை கொள்வதாகவும் செல்வகுமார் கூறுகின்றார். இவருக்கு உதவிக்கரங்கள் நீட்டி, அவரது வாழ்வை அவர் ஈட்டும் வருமானத்திலேயே வாழ வழிவகை செய்யுமாறும், கவலை தோய்ந்த குரல்களுடன் அவரது தாயார் மற்றும் அக்கம் பக்கத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com