காஞ்சிபுரம் பகுதி இளைஞரொருவர், கிபி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இன்று வரையிருக்கும் தமிழ் எழுத்துகள் அனைத்தையும் பயன்படுத்தி, மொத்தம் 741 எழுத்துகளைக் கொண்டு திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்திருக்கிறார். தமிழி எழுத்து, தமிழ் வட்டெழுத்து, தமிழ் எழுத்து ஆகிய எழுத்துகளை இதற்காக அவர் பயன்படுத்தியிருக்கிறார். இளைஞரின் இந்த முயற்சி, முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனத்தை ஈர்த்துள்ளது.
காஞ்சிபுரத்தை அடுத்த பொன்னேரி கரையிலுள்ள தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் சுந்தர்- முருகம்மாள் தம்பதியினர். இவர்களது இளைய மகன் கணேஷ், சிவில் டிப்ளமா படித்துவிட்டு தனியார் தொழிற்சாலையில் தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார்.
சிறுவயது முதலே ஓவியம் வரைவதில் மீது ஆர்வம் கொண்டிருந்த கணேஷ் ஓவியத்தின் மீதிருந்த தனியாத தாகத்தால் தொழிற்சாலை பணியிலிருந்து வீடு திரும்பி ஓய்வு நேரங்களில் தொடர்ந்து பென்சில் வரைவு ஓவியங்களை வரைந்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஓவியர் கணேஷ், கிபி மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பு இருந்த தமிழ் எழுத்துகள் முதல் தற்போது வரை பயன்படுத்தும் தமிழ் எழுத்துகள், தமிழ் வட்டெழுத்துக்கள், உள்ளிட்ட 741 எழுத்துக்களால் திருவள்ளுவரின் உருவத்தை தத்ரூப ஓவியமாக வரைந்து உள்ளார்.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் பதிவேற்றம் செய்திருந்தனர். அவர்களின் ட்விட்டர் பக்கத்தின் வழியாக படத்தைப் பார்த்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓவியக் கலைஞர் கணேஷ் வரைந்த ஓவியத்தை தனது பக்கத்தில் பதிவிட்டு பாராட்டியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பாராட்டியதைத்தொடர்ந்து ஏராளமான தமிழ் அறிஞர்களும், கணேஷின் ஓவியத்திறமையை பாராட்டி வருகின்றனர்.
- பிரசன்னா