தூத்துக்குடி மாவட்டம், சில்லாநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி. லாரி டிரைவரான இவருக்கு மது மற்றும் சூதாட்டம் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மது அருந்திவிட்டு அவரது வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதன் காரணமாக பல லட்ச ரூபாய் கடன் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சில்லாநத்தம் கிராமத்தில் உள்ள பூர்வீக வீட்டையும் விற்பனை செய்து தனக்கு பணம் தர வேண்டும் என அண்ணன் நல்லதம்பி, தம்பியான முத்துராஜிடம் கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு மது போதையில் வந்த அண்ணன் நல்லதம்பி, தம்பி முத்துராஜிடம் தகராறு செய்ததாகச் சொல்லப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த தம்பி முத்துராஜ் மற்றும் சித்தப்பா மகன் முத்துராஜ் ஆகியோர் சேர்ந்து அருகே உள்ள பண்டாரம்பட்டி காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று தலையில் இரும்புக் கம்பியால் நல்லதம்பியை கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
பின்னர், இன்று காலை புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் தம்பி, முத்துராஜ் மற்றும் சித்தப்பா மகன் முத்துராஜ் ஆகிய இருவரும் சரணடைந்தனர். இதைத்தொடர்ந்து, பண்டாரம்பட்டி காட்டுப்பகுதியில் கிடந்த நல்லதம்பியின் உடலை சிப்காட் காவல் துறையினர் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்த இருவரிடம் சிப்காட் போலீசார் மற்றும் ஊரக துணை கண்காணிப்பாளர் சுரேஷ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் பேசினோம். அவர், ”நல்லதம்பியின் தம்பிகள் இருவரிடமும் சிப்காட் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விசாரணையின் முடிவில் என்ன நடந்தது என தெரியவரும்” என்று கூறினார்.
கடன் பிரச்சனையிலும், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து வந்த அண்ணனை, ஆத்திரமடைந்த தம்பிகள் இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜன்,
தூத்துக்குடி நிருபர்