வளர்ப்பு நாயை வேண்டாம் என பெற்றோர்கள் தெரிவித்ததால் பட்டதாரி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது.
கோவை சாமிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் கவிதா. பட்டதாரி இளம் பெண்ணான கவிதா பத்திரம் எழுதும் இடத்தில் வேலைபார்த்து வருகிறார். இந்த சூழ்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு நாய்க்குட்டியை வளர்க்க ஆரம்பித்த கவிதா அதற்கு ‘சீசர்’ என பெயரிட்டு மிகவும் செல்லமாக வளர்த்து வந்துள்ளார்.
தான் வளர்த்த நாய்க்கு உணவு வைப்பது, அதனை குளிப்பாட்டுவது என மிகவும் ஆர்வமுடன் தனது நாயை வளர்த்து வந்த நிலையில், சீசரும் கவிதாவுடன் மிகவும் அன்பு பாராட்டி வந்துள்ளது. வீட்டிற்கு கவிதா வரும் சப்தம் கேட்டாலே கவிதாவை காண துடிக்கும் சீசர், வீட்டு கதவினை தனது கால்களால் சிராய்ப்பு செய்வதும் குரைப்பதுமாய் இருந்து வந்துள்ளது. இதனால் வீட்டு கதவு பழுதாவதால், பெருமாள் பலமுறை கவிதாவிடம் நாய் வேண்டாம் என கூறிவந்துள்ளார்.
இந்நிலையில் கவிதா அதனை ஏற்காததால் இரும்பு கதவையே அண்மையில் வீட்டிற்கு பொருத்தியுள்ளார் பெருமாள். இந்த சூழ்நிலையில் தீபாவளியின்போது அதிகமான பட்டாசுகளால் அச்சமுற்ற சீசர் தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருந்திருக்கிறது. மேலும் இரவு நேரங்களில் கவிதாவை காண வேண்டும் என தொடர்ந்து குரைப்பதையும் வழக்கமாக வைத்துள்ளது. இதனால் அக்கம்பக்கத்து வீட்டார் பெருமாளிடம் நாய் தொடர்ந்து குரைப்பதால் தங்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறியுள்ளனர்.
இதனால் சீசர் மீது கோபம் கொண்ட பெருமாள் சீசரை வெளியே விட முடிவெடுத்திருக்கிறார். இது தொடர்பாக மீண்டும் கவிதாவிடம் உறுதிபட சீசரை கைவிடும் படி பேசியிருக்கிறார். இதனை முற்றிலுமாக ஆட்சேபித்த கவிதா, இரவு தனது குடும்பத்துடன் உணவு உண்டபின் தனது அறைக்கு சென்றுதூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
கடந்த 29-ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் அப்போது, கவிதா எழுதி வைத்த கடிதம் ஒன்று சிக்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதில் குடும்பத்தார் தன்னை மன்னித்து விடுமாறும் சீசரை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறும் குறிப்பிட்டுள்ளார்.
தான் செல்லமாக வளர்த்த நாயை பிரிய மனமின்றி பட்டதாரி இளம் பெண்ணான கவிதா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சீசரும் கவிதாவை காணாமல் சோகத்துடன் இருந்து வருகிறது. உணவு உண்ணவும் மறுத்து வருகிறது. தான் செல்லமாக வளர்த்த கவிதாவை காணவில்லை என்ற ஏக்கத்துடன் சீசர் சோகமாகவே தனது நாட்களை கழித்து வருவதாக கவிதா குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)