செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள பகவத்சிங் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி சசிகலா [37]. இவர்களுடைய வீட்டில் தேனி மாவட்டம், காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், இவரது மனைவி பத்மபிரியா [27] ஆகியோர் வாடகைக்கு இருந்து வந்துள்ளனர். சுரேஷ் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பத்மப்பிரியா மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்தநிலையில், கடந்த மே மாதம் சசிகலா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், பத்மபிரியா சசிகலா வீட்டிலிருந்த ஏழு சவரன் தங்க நகையைத் திருடிவிட்டுத் தலைமறைவானதாக கூறப்படுகிறது.
இது குறித்து சசிகலா மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சம்பவம் நடந்து ஆறு மாதம் கழித்து பத்மப்பிரியா மறைமலைநகர் அருகே உள்ள கீழக்கரணை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருவது சசிகலாவிற்குத் தெரியவந்தது. பின்னர் உடனடியாக சசிகலா மறைமலைநகர் காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் பத்மப்பிரியாவை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், சசிகலா வீட்டில் ஏழு சவரன் தங்க நகை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார். ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்வதால் அந்த நிறுவனத்திற்கு ஏற்றார் போல் உடை மற்றும் அழகு சாதன பொருட்கள் வாங்குவதற்கு போதிய பணம் இல்லாததால் 7 சவரன் தங்க நகையைத் திருடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து பத்மபிரியாவை கைது செய்து அவரிடம் இருந்த ஏழு சவரன் தங்க நகையைப் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
மேக்கப் போடுவதற்காகத் தங்க நகை திருடிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.