கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே இரண்டு குழந்தைகளின் தாயான பார்மசிஸ்ட் பெண்ணை, மினி பஸ் டிரைவர்கள் காதலிக்கச் சொல்லி வற்புறுத்தியதாகவும், அதனால் தான் தற்கொலை செய்துகொள்வதாகவும் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இருப்பினும் குற்றவாளிகள் போலீசாரால் கைது செய்யப்படாத நிலையில், மினி பஸ் டிரைவர்கள் அவரை விரட்டி விரட்டி அவரிடம் அத்துமீறும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை அடுத்த காரியாவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த குமார். இவரது மனைவி சஜிலா. இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர் பார்மசிஸ்ட் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சனிக்கிழமை பணி முடிந்து வீட்டிற்கு வந்த அவர் 4-பக்க கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு வீட்டின் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து அங்கு சென்ற குளச்சல் போலீசார் தற்கொலை வழக்குப்பதிவு செய்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு 4-பக்க கடிதத்தையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அதில் மினிபஸ் டிரைவர் துரோகம் செய்துவிட்டதாக எழுதப்பட்டிருந்தது. இந்த நிலையில் சஜிலாவின் தற்கொலைக்கு மினிபஸ் டிரைவர்கள் கொடுத்த லவ் டார்ச்சர்தான் காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியும் போலீசார் அவர்களை கைது செய்யாத நிலையில், பணி முடிந்து வீடு திரும்பும் சஜிலாவை மினிபஸ் டிரைவர்கள் விரட்டி விரட்டி தடுத்து நிறுத்தி அத்துமீறி டார்ச்சர் கொடுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.