கோவை மாவட்டம் ஒலம்பஸ் பகுதியில் வீட்டின் நடு அறையில் தூங்கிக் கொண்டிருந்த போது காங்கிரீட் மேல்பூச்சு பெயர்ந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ராமநாதபுரம் பாரதி நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் கே. வினோத் கண்ணன் (35). கடந்த 8 ஆண்டுகளாக தனது மனைவி சாரு (26), இரண்டு மகள்கள் மற்றும் அவரது தந்தை கிருஷ்ணன் (60) ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். வினோத் கண்ணன், வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கான PVC (பாலிவினைல் குளோரைடு) கதவுகளை தயாரிக்கும் பணியை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், வினோத் கண்ணன் வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் ஹாலில் தூங்கிகொண்டு இருந்துள்ளார். அப்போது, நள்ளிரவு 1.45 மணியளவில் அவர் மீது கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதில் வினோத் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து வீட்டை விட்டு வெளியே வந்த வினோத் கண்ணனின் குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினருக்கும், ராமநாதபுரம் காவல்துறைக்கும் தகவல் அளித்தனர்.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூங்கிக் கொண்டிருந்தபோது இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பதிகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.