கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பத்து ரூபாய் காயின்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இளைஞர் ஒருவர் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புதிய பைக்கை பத்து ரூபாய் காயின்ஸ்களை மட்டுமே ஷோரூமில் கொடுத்து வாங்கி உள்ளார்.
ஓசூர் அருகே உள்ள கெலமங்கலத்தைச் சேர்ந்தவர் ராஜிவ் (31). இவர் தனக்கு சொந்தமான தனியார் மருத்துவமனையில் நிர்வாக மேலதிகாரியாக வேலைபார்த்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக 10 ரூபாய் காயின்ஸ்களை வீட்டில் சேமித்துவரும் ராஜிவ் தனக்கு பிடித்த டிவிஎஸ் அப்பாச்சி பைக் வாங்க முடிவு செய்தார். இதற்காக தனது நண்பர்களிடமும் பத்து ரூபாய் காயின்ஸ்களை வாங்கி சேகரித்துள்ளார்.
இந்நிலையில் இன்று தான் சேகரித்து வைத்திருந்த ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பத்து ரூபாய் காயின்ஸ்களை பைக் ஷோரூமில் கொடுத்து புதிய அப்பாச்சி பைக்கை வாங்கினார். இதற்காக காரில் பத்து ரூபாய் காயின்ஸ்களை 8 மூட்டைகளில் கட்டி எடுத்து வந்த ராஜிவ் அதனை ஷோருமில் ஓரிடத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கொட்டினார்.
இதனையடுத்து இரண்டு மணி நேரமாக பத்து ரூபாய் காயின்ஸ்களை எண்ணும் பணிகளில் ஷோரூம் ஊழியர்கள் ஈடுபட்டனர். அதன் பின்பு மற்ற பணிகள் முடிவடைந்த பின்னர் ஷோரூம் சார்பில் புதிய பைக் அவருக்கு வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பத்து ரூபாய் காயின்ஸ்கள் செல்லாத நிலை உள்ளது. பேருந்துகள், கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பத்து ரூபாய் காயின்ஸ்களை பொதுமக்கள் கொடுத்தும் வியாபாரிகள் வாங்குவதில்லை.
பத்து ரூபாய் காயின்ஸ்கள் செல்லும் என்பதை வலியுறுத்தி ராஜிவும் அவரது நண்பர்களும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆகியோரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.