பிரபலமாக வேண்டும் என்பதற்காக இரண்டு கார்களுக்கு தீ வைத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. கார்களுக்கு தீ வைத்த நபரை கைதுசெய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை வளசரவாக்கம் அடுத்த ஆழ்வார் திருநகர், துரைராஜ் தெருவில் இரண்டு கார்கள் அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்ததைக் கண்டு காரின் உரிமையாளர்கள் வெளியே வந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வளசரவாக்கம் போலீசாருக்கும், தீயணைப்பு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த காரில் தண்ணீர் ஊற்றி அனைத்து போலீசார் விசாரணை செய்தனர்.
விசாரணையில் தீப்பிடித்து எரிந்தது அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த், கோகுல் ஆகியோரின் கார்கள் என்பதும், கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் பாட்டிலில் மண்ணெண்ணெய் எடுத்து வந்து கார்களின் மீது ஊற்றி தீ வைத்ததும் தெரியவந்தது. அந்த நபரை தீவிரமாக தேடிவந்த நிலையில், போலீசாரிடம் சிக்கிய நபரிடம் விசாரித்தபோது, அவர் அதே பகுதியில் வாடகைக்கு தங்கி டி.ஜேவாக பணிபுரிந்து வந்த விக்னேஷ் என்பது தெரியவந்தது.
இவர் தன்னை டிக்டாக், யூடியூபர்கள் போன்று பிரபலமாக்கி கொள்ள வேண்டும் என்பதற்காக இரண்டு கார்களுக்கு தீ வைத்து எரித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து பிரபலமாக வேண்டும் என கார்களுக்கு தீ வைத்து எரித்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் வளசரவாக்கம் போலீசார் அந்த நபரை பிடித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.