மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போட்டிகள், கருத்தரங்கு மற்றும் மகளிர் தினம் கொண்டாடுவதற்கான அவசியம் போன்ற பல விஷயங்கள் சிறப்பு விழாக்களில் பேசப்பட்டது. குறிப்பிட்ட 8ம் தேதி மட்டுமல்லாது, அதற்கு முன்பும், பின்புமாக கிட்டத்தட்ட ஒருவாரத்திற்கும் மேலாக மகளிர் தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அந்த வகையில் சிஐஐ-ன் இளைஞர் அமைப்பான Young Indians-ன் சென்னை பிரிவு சார்பில் சென்னை ஃபீனிக்ஸ் மார்கெட் சிட்டியில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொழில்முனைவோர்கள், மற்றும் தங்களது துறைகளில் சாதித்த பலரும் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அதில் இருந்து எப்படி மீள்வது உள்ளிட்டவற்றை எடுத்துக்கூறி, அவர்களை மேம்படுத்துவதை கருப்பொருளாக கொண்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், ”பெண்களுக்கான மேம்பாடு: தலைமைத்துவம் மற்றும் வெற்றிக் கதைகள்”, “போராட்டத்தின் ஊக்கமளிக்கும் கதைகள்: சமூகத்தில் பெண்களின் தாக்கம்” என்று இரு பகுதிகளாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முதலாவதான “பெண்களுக்கான மேம்பாடு: தலைமைத்துவம் மற்றும் வெற்றிக் கதைகள்” பகுதியில் நிகிதா மற்றும் பல்லவி கே. நாயகர் உள்ளிட்டோர் பங்கேற்று தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
அதேபோல், போராட்டத்தின் ஊக்கமளிக்கும் கதைகள்: சமூகத்தில் பெண்களின் தாக்கம் பகுதியில் லதா குமாரசாமி மற்றும் விஜயலட்சுமி, பூணம் நடராஜன் போன்றோர் பங்கேற்று பேசினர். தனிப்பட்ட முறையிலும், வேலை விஷயத்திலும் தாங்கள் சந்தித்த தடைகள், அவற்றை எப்படி கடந்து வந்தோம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஊக்கமளிக்கும் விதத்தில் பகிர்ந்துகொண்டனர்.
குறிப்பாக, வேலை சூழல்களில் தலைமைத்துவத்தில் பெண்களின் பங்களிப்பின் மூலம் பாலியல் சமத்துவ ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அவர்களுக்கான அங்கீகாரத்தை உறுதிப்படுத்துதல் போன்ற பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டது.