திருவள்ளூரில் கடந்த சில நாட்களாக, புகைந்து வரும் காட்டுத்தீ போல பரவுத் தொடங்கியுள்ள விஷயம் தான் இளம் பெண்கள் மாயம் எனும் செய்தி. கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை சுமார் 60க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் திருவள்ளூரில் காணாமல் போயுள்ளனர். காணாமல் போவற்கு காரணம் என்ன? இந்த சம்பவங்களுக்கு பின்னணி தான் என்ன? என்று பொதுமக்கள் மத்தியில் பரவலான ஒரு கேள்வி எழுந்துள்ளது. இது கடத்தலா? என்ற பயமும் பெற்றோர்களுக்கு எழுந்துள்ளது.
இளம்பெண்கள் காணாமல் போகும் சம்பவங்கள் பெரும்பாலும், மார்ச் மாதம் பள்ளித் தேர்வுகள் முடிந்து, அதன்பிறகு விடப்பட்டுள்ள விடுமுறைக்கு பின்னர் தான் அதிகரித்துள்ளதாக பதிவாகியுள்ள வழக்குகள் மூலம் தெரிகிறது. மார்ச் மாதத்திற்கு பிறகு மட்டுமே 40 பேர் காணாமல் போயுள்ளனர். வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது 40 தான். ஆனால் புகார் கொடுக்காமலே நிறைய பெற்றோர் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. காணாமல் போனவர்கள் பெரும்பாலும் பள்ளிப்பெண்கள்.
இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்ட காவல் அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘இதுபோன்று இளம்பெண்கள் காணாமல் போகும் சம்பவம் திருவள்ளூர் மட்டுமின்றி, சென்னை மற்றும் காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் அதிகம் நடைபெறுகின்றன. காணாமல் போனவர்களில் இதுவரை 90 சதவிகிதம் பேர் திருவள்ளூரில் மீட்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் காதல் ? விவகாரம் காரணமாக காணாமல் போனவர்கள் தான்’ என்று கூறினார். ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் ? உண்மையிலேயே இதுதான் காரணமா ? என்ற சந்தேகங்களும் எழுகின்றன. ஏனெனில் காணாமல் போனவர்களில் சில சிறுமிகளும், சில நடுத்தர வயது பெண்கள் உள்ளது குறிப்படத்தக்கது.
காவல்துறை தரப்பில் இது ஒரு சாதாரண நிகழ்வு தான் என்ற அடிப்படையில் கூறப்பட்டாலும், இதுபோன்று பெண்கள் காணாமல் போகும் செயலுக்கு, பாலியல் குற்றங்களுக்காக கடத்தப்படும் வேறேதும் பின்னணி இருக்கிறதா? அது காவல்துறை சார்பில் மறைக்கப்படுகிறதா? என்று மக்கள் சார்பில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. பெண்களுக்கு முழுச்சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம், ஆனால் அதேசமயம் இளம் வயதில் கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொள்ள வேண்டியதும் பெற்றோர்களின் கடமை தான் என்று மனநல மருத்துவர் சீதாராமன் கூறுகின்றார்.