வழக்கறிஞர் கனவுகளுடன் வலம் வந்த இளம்பெண் - துப்பாக்கிக்குண்டுக்கு இரையான பரிதாபம்

வழக்கறிஞர் கனவுகளுடன் வலம் வந்த இளம்பெண் - துப்பாக்கிக்குண்டுக்கு இரையான பரிதாபம்
வழக்கறிஞர் கனவுகளுடன் வலம் வந்த இளம்பெண் - துப்பாக்கிக்குண்டுக்கு இரையான பரிதாபம்
Published on

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக உயிரிழந்த போராட்டக்காரர்களில் ஒருவர் ஸ்னோலின். ஓயாமல் பேசிக்கொண்டே இருந்த மகள் வாயில்‌ சுடப்பட்டு கொடூரமாக ‌உயிரிழந்ததை தாங்கிக்கொள்ள முடியாமல் பரிதவிக்கிறது அவரது குடும்பம்.

தூத்துக்குடி மினி சகாயபுரத்தைச் சேர்ந்த ஸ்னோலின் பிளஸ் டூ முடித்துவிட்டு தேர்வு முடிவுக்காக காத்திருந்த மாணவி. 17 வயதான ஸ்னோலின், வீட்டிற்கு ஒரே மகள். தாய், தந்தையின் அன்பாலும், அண்ணன்களின் பாசத்தாலும், அண்ணியின் கொஞ்சலிலும் வளர்ந்தவர் ஸ்னோலின். மண்ணின் உரிமைக்காக உற்சாகத்துடன் போராடச்சென்ற இந்த இளம் பெண், துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகிவிட்டார்.

வழக்கறிஞராக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த ஸ்னோலின், தனது தாய், அண்ணி, அண்ணனின் குழந்தை என அனைவரையும் உற்சாகப்படுத்தி போராட்டத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். கையில் கொடி பிடித்தபடி முன்னேறிச்சென்று முழக்கமிட்ட ஸ்னோலின், கலவரத்தின்போது திடீரென கையை விட்டுவிட்டதால் அவரும் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிட்டார் என்றுதான் எண்ணிக்கொண்டிருந்திருக்கிறார் போராட்டத்தின்போது உடன் சென்ற அண்ணி மெரில்டா. 

போராட்டக்காரர்கள் முன்னே சென்றுகொண்டிருக்கும்போதே, மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வாகனங்களுக்கு தீ வைத்தது எப்படி என்ற கேள்வியை எழுப்பும் இன்பென்டா, தன்னை காப்பாற்ற வந்த ஸ்னோலின் துப்பாக்கிக்குண்டுக்கு பலியாகிவிட்டதாக வேதனையுடன் கூறுகிறார். படித்து வழக்கறிஞராகவேண்டும் என்று ஆசைப்பட்ட ஸ்னோலின், தனது மண்ணுக்காகவும், வருங்கால சந்ததியினரின் வளமான வாழ்க்கைக்காகவும் சிந்திய ரத்தம் தூத்துக்குடி மண்ணில் உறைந்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com