ராமநாதபுரம் அருகே இளம் பெண்ணின் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக உறவினர்களே அடித்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த டி.வல்லக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராதிகா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வல்லக்குளம் கால்வாயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து அபிராமம் போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்து, உடலை கைப்பற்றி கமுதி அரசு மருத்துமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ராதிகாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, உடலை வாங்க மறுப்பு தெரிவித்தும், கொலை வழக்காக பதிவு செய்து உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனவும் ராதிகாவின் உறவினர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து இளம் பெண்ணின் தற்கொலை வழக்கை வன்கொடுமை மற்றும் கொலை வழக்காக பெயர்கள் குறிப்பிடாமல் ஆறு நபர்கள் மீது அபிராமம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே இளம் பெண் ராதிகா திருமணமாகி தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து பெற்றோரின் அரவணைப்பில் இருந்து வந்தது தெரியவந்தது. அப்போது ராதிகா அதே பகுதியில் மாற்று சமூகத்தை சேர்ந்த நபர் ஒருவருடன் நட்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இளம் பெண்ணின் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக இறந்த ராதிகாவின் உறவினர்களான முருகன், மோகன், அழகர்சாமி, விக்னேஸ்வரன், பாபா, முனியசாமி உள்ளிட்ட ஆறு பேர் சேர்ந்து ராதிகாவை அடித்து கொலை செய்ததும், பின் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்ததும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் ஆறு பேர் மீதும் தடயங்களை மறைத்து கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் 6 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.