நாட்றம்பள்ளி அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கத்தாரி கிராமம் மணியகார் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி ஸ்வேதா (22). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்ததை அடுத்து இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் ராஜேஷ் மற்றும் அவரது தாயார் ஸ்வேதாவிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஸ்வேதா தூக்கிட்ட தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தெம்மாம் பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது ஸ்வேதாவின் உறவினர்கள், ஸ்வேதாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி கத்தரி கிராமத்திலிருந்து ஸ்வேதாவின் உடலை ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை தூக்கி சென்று தேசிய நெடுஞ்சாலையில் வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்வேதாவின் இறப்பிற்கு காரணமான அவரது கணவர், மாமியார் மற்றும் மாமனாரை உடனடியாக கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் தலைமையிலான காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதைத் தொடர்ந்து காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.