உயிரைக் காவு வாங்கிய பிரதான சாலையின் பெரும் பள்ளம்.. அரசு நடவடிக்கை எடுக்குமா ? - உறவினர்கள் கேள்வி!

சாலை விதிகளை மதிக்காமல் சென்றால் அபராதம் போடும் காவல்துறை, சாலைகளை குண்டும் குழியுமாக வைத்திருக்கும் அரசு மீது நடவடிக்கை எடுக்குமா? - உறவினர்கள் கேள்வி!
உயிரிழந்த ஹேம மாலினி
உயிரிழந்த ஹேம மாலினிகோப்பு படம்
Published on

அன்பரசன்.ஜெ

சென்னை ICF டாக்டர் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் குப்பன் - தாயம்மாள். இவர்களுக்கு 28 வயதில் வெங்கடேசன் என்ற மகனும், 24 வயதில் ஹேம மாலினி என்ற மகளும் இருந்துள்ளனர். வெங்கடேசன் AC மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். ஹேமா மாலினி பி.காம் மற்றும் எம்.காம் முடித்துள்ளார்.

இந்த நிலையில் ஹேம மாலினியின் தோழியின் திருமணம் நேற்று அம்பத்தூரில் நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக ஹேம மாலினி மற்றும் அவரது அண்ணன் வெங்கடேசன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். நிகழ்ச்சி முடித்துவிட்டு அம்பத்தூர் பாடி வழியாக கோயம்பேடு 100 அடி சாலையில் வந்துள்ளனர்.

அப்போது கனமழை தொடங்கியதால் வீட்டிற்கு செல்வதற்காக அவசர அவசரமாக இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். இந்த நிலையில் திருமங்கலம் 100 அடி சாலை - அண்ணா நகர் 18-வது பிரதான சாலை சந்திப்பு பகுதியில் கடக்கும்போது சாலை முழுவதும் தண்ணீரில் மூழ்கி இருந்துள்ளது. மேலும், தண்ணீர் மூழ்கிய இடத்தில் இரண்டடி அகலத்தில் முக்கால் அடி ஆழத்தில் மிகப்பெரிய பள்ளம் ஒன்று இருந்துள்ளது.

சரியாக இரவு 11.15 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த வெங்கடேசன் தண்ணீரில் செல்லும்போது, அங்கு தண்ணீரில் மூழ்கி இருந்த பள்ளத்தில் இரு சக்கர வாகனம் இறங்கி ஏறியபோது நிலை தடுமாறி வெங்கடேசன் இடது புறமாகவும் அவரது தங்கை ஹேம மாலினி வலது புறமாகவும் விழுந்துள்ளார்.

அப்போது, பின்னால் அதிவேகமாக வந்த லாரி ஹேம மாலினியின் வயிற்றில் ஏறி இறங்கி வேகமாக சென்றது. இதனையடுத்து ஹேம மாலினி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உயிரிழந்த ஹேம மாலினியின் உடலை உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்குப்பதிவு செய்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் தப்பியோடிய லாரி ஓட்டுநரை சிசிடிவி காட்சிகள் வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் விபத்து ஏற்படுவதற்கு காரணமாக இருந்த பெரும் பள்ளத்தை மாநகராட்சி ஊழியர்கள் இருவோடு இருவாக மூடியுள்ளனர்.

விபத்திற்கு காரணமான பள்ளம்
விபத்திற்கு காரணமான பள்ளம்கோப்பு படம்

இந்த நிலையில் தானும் தனது தங்கையும் இருசக்கர வாகனத்தில் வந்தபோது சாலை முழுவதும் மழை நீர் தேங்கி இருந்ததாகவும் தண்ணீருக்கும் கீழே பெரும் பள்ளம் இருந்ததால் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததாகவும் பின்னால் வந்த லாரி தன் தங்கை மீது ஏறி இறங்கியதாகவும் ஹேம மாலியின் அண்ணன் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் தன் தங்கை இரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தபோது உதவிக்காக அங்குமிங்கும் ஓடியதாகவும், ஆனால் சாலையில் சென்ற யாருமே தன் தங்கையை காப்பாற்ற முன் வரவில்லை எனவும் தன் கண்முன்னே தன் தங்கையின் உயிர் பிரிந்ததாகவும் வெங்கடேசன் கதறி அழுதார்.

அதுமட்டுமல்லாது சாலையில் தெரு விளக்குகள் எரியவில்லை எனவும் தன் தங்கை இறப்புக்கு சாலையில் இருந்த பள்ளமே காரணம் எனவும் இதற்கு அரசு பதில் சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கடந்த வாரம் தனது 24-வது பிறந்தநாளை கொண்டாடிய ஹேம மாலினி, வணிகவியல் ஆசிரியர் அல்லது பேராசிரியராக வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஆண்டு பிஎட் அல்லது பிஹெச்டி படிப்பில் சேர்வதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்திருக்கிறார். ஆனால் இன்று அவர் உயிருடன் இல்லை.

ஹேம மாலினியின் உறவினரான ஸ்ரீதர் நமக்கு அளித்த பேட்டியில், " ஹெல்மெட் போடவில்லை என்றால், சாலை விதிகளை மதிக்கவில்லை என்றால் உடனுக்குடன் அபராதம் விதிக்கும் காவல்துறை சாலையை பராமரிக்காமல்விட்ட அரசு துறை மீது நடவடிக்கை எடுக்குமா?" எனக் கேள்வி எழுப்பினார்.

"எங்கள் பிள்ளைக்கு நடந்ததுபோல வேறு யாருக்கும் நடக்கக்கூடாது. உடனடியாக சென்னையில் உள்ள அனைத்து சாலைகளிலும் உள்ள மேடு பள்ளங்களை சரி செய்ய வேண்டும்" எனவும் கோரிக்கை விடுத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com