தெங்குமரஹாடா கிராமத்தில், ஆரம்ப சுகாதார நிலையத்தில் தங்கி மருத்துவ சேவை செய்த இளம்வயது மருத்துவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததையடுத்து கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனப்பகுதியில் அடர்ந்த மலைகளுக்கு மத்தியில் தெங்குமரஹாடா கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தை சுற்றிலும் மாயாறு ஓடுகிறது. இதனால் மக்கள் பரிசல் மூலம் மாயாற்றை தாண்டி கிராமத்துக்குள் செல்கின்றனர். சுமார் 5 ஆயிரம் பேர் வசிக்கும் இக்கிராமம் அடர்ந்த காட்டுப்பகுதியில் உள்ளதால் இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எந்த மருத்துவரும் வருவதில்லை.
இந்நிலையில், சிறுமுகையைச் சேர்ந்த ஜெயமோகன் என்ற 30 வயது மருத்துவர், கடந்த 3 ஆண்டுகளாக இங்கு தங்கி மருத்துவம் பார்த்து வந்தார். மக்களுடன் அன்பாக பழகிய மருத்துவர் ஜெயமோகன், பகல் இரவு பராமல் சிகிச்சை அளித்து வந்தார். இந்நிலையில் திடீரென சில தினங்களுக்குமுன் காய்ச்சலால் அவதிப்பட்ட அவர் ஆம்புலன்ஸ் மூலம் கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாமல் மருத்துவர் ஜெயமோகன் உயிரிழந்தார். ஆனால் அவருக்கு கொரோனா இல்லை என்று ஆரம்ப சுகாதாரநிலையத்தினர் தெரிவிக்கிறார்கள். எந்த வசதிகளும் இல்லாத காட்டுக்குள், கிராம மக்களுக்கு சேவை செய்து வந்த இளம் மருத்துவரின் இறப்பு, தெங்கு மரஹடா மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.