அமெரிக்க இளைஞர், தமிழக பெண்: காணொலி மூலம் திருமணம் செய்ய நீதிமன்றம் அனுமதி

அமெரிக்க இளைஞர், தமிழக பெண்: காணொலி மூலம் திருமணம் செய்ய நீதிமன்றம் அனுமதி
அமெரிக்க இளைஞர், தமிழக பெண்: காணொலி மூலம் திருமணம் செய்ய நீதிமன்றம் அனுமதி
Published on

அமெரிக்க இளைஞருடன் தமிழக பெண் காணொலி மூலம் திருமணம் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வம்சி சுதர்ஷினி, மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், 'இந்தியாவைச் சேர்ந்த ராகுல் எல் மது, தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளார். இவரும் நானும் பழகினோம். தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம்..

இதற்கு எங்கள் பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். நாங்கள் இருவரும் இந்து மதத்தை பின்பற்றுபவர்கள். நாங்கள் இங்குள்ள சிறப்பு திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்து கொள்ள தகுதி பெற்றுள்ளோம். இந்த சட்டத்தின்படி திருமணம் செய்து கொள்ள ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தோம்.

பின்னர் நாங்கள் இருவரும் திருமண பதிவு அதிகாரி முன்பு நேரில் ஆஜரானோம். ஆனால் எங்கள் திருமண விண்ணப்பத்தின் பேரில் முடிவு எடுக்க 30 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் காரணமாக, நாங்கள் இருவரும் காத்திருந்தோம். 30 நாட்கள் முடிந்த பின்பும், எங்கள் திருமண விண்ணப்பத்தின் மீது சார்பதிவாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே எனது வருங்கால கணவர் ராகுல், இங்கு தங்குவதற்கு அவகாசம் இல்லாமல் போனது. அவரது விடுமுறையை நீட்டிக்க வழியில்லை. இதனால் அவர் அமெரிக்கா சென்றுவிட்டார். ஆனால், திருமண பதிவு சம்பந்தமான நடவடிக்கைகளை எடுக்க அவரது சார்பில் எனக்கு முழு அதிகாரத்தை வழங்குவதாக பிரமாணப்பத்திரம் அளித்துள்ளார்.

எனவே நாங்கள் இருவரும் காணொலி மூலம் திருமணம் செய்து கொள்ளவும், அந்த திருமணத்தை சிறப்பு சட்டத்தின் மூலம் பதிவு செய்யவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ' திருமணம் என்பது மனிதனின் அடிப்படை உரிமை. மனுதாரர்கள் தங்களின் திருமணத்தை நடத்த ஆன்லைன் முறையை தேர்ந்தெடுத்துள்ளனர். எனவே அவர்களின் திருமணத்தை காணொலி வழியாக நடத்த அனுமதிக்கப்படுகிறது. 3 சாட்சிகள் முன்னிலையில் மனுதாரர் தன் தரப்பிலும், ராகுல் தரப்பிலும் திருமண பதிவு புத்தகத்தில் கையெழுத்திடலாம். அதன்பின் சட்டப்படி திருமண பதிவு சான்றிதழை மணவளக்குறிச்சி சார்பதிவாளர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com