புதிய ஏடிஜிபிக்கள் மற்றும் சென்னை மாநகர புதிய காவல் ஆணையரின் பின்னணி என்ன?

புதிய ஏடிஜிபிக்கள் மற்றும் சென்னை மாநகர புதிய காவல் ஆணையரின் பின்னணி என்ன?
புதிய ஏடிஜிபிக்கள் மற்றும் சென்னை மாநகர புதிய காவல் ஆணையரின் பின்னணி என்ன?
Published on

தமிழக உளவுத்துறை மற்றும் சட்டம்-ஒழுங்கு புதிய ஏடிஜிபிக்கள், சென்னை மாநகர புதிய காவல் ஆணையர் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

சிறப்பு புலனாய்வுப் பிரிவு, க்யூ பிரிவு மற்றும் சில முக்கிய பிரிவுகளை உள்ளடக்கிய உளவுத்துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், 1995ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவு அதிகாரியாவார். தற்போது கோவை மாநகர காவல்துறை ஆணையராக இருக்கும் அவர், 2015ஆம் ஆண்டு ஐஜி ரேங்கில், உளவுத்துறை தலைவராக சிறிது காலம் பணியாற்றியவர். தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் க்யூ பிரிவின் எஸ்.பி.யாகவும் பணியாற்றியுள்ளார் டேவிட்சன் தேவாசீர்வாதம். மதுரை மாநகர காவல் ஆணையராகவும், நிர்வாகப் பிரிவு ஐஜியாகவும், மேற்கு மண்டல ஐஜியாகவும், போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் தென் மண்டல இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார். சிறந்த காவல்பணிக்கான குடியரசுத்தலைவர் தலைவர் விருதை கடந்த ஜனவரி மாதம் பெற்றவர். உளவுத்துறை ஐஜியாக இருக்கும் சி.ஈஸ்வரமூர்த்தி, ஏடிஜிபி பணிகளையும் கவனித்து வந்த நிலையில், அந்த பதவிக்கு டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக இருக்கும் ஜெயந்த் முரளி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக, ஐபிஎஸ் அதிகாரி தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் காவல்துறையின் நலவாழ்வுப் பிரிவு ஏடிஜிபியாக பணியாற்றி வருகிறார். 2012ஆம் ஆண்டு சென்னை வங்கி கொள்ளை வழக்கில் வடமாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்போது சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையராக பதவி வகித்தவர் தாமரைக்கண்ணன்.

சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலுக்கு பதிலாக நியமிக்கப்பட்டிருக்கும் சங்கர் ஜிவால், 1990ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவு அதிகாரியாவார். தற்போது அவர் ஆயுதப்படை பிரிவு ஏடிஜிபியாக இருக்கிறார். முன்னதாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை தலைமையிடமாக கொண்ட சிறப்பு அதிரடி படைப் பிரிவில் ஆறு ஆண்டுகள் பணியாற்றியவர் சங்கர் ஜிவால். திருச்சி மாநகர காவல் ஆணையராக பதவி வகித்த போது, பூட்டப்பட்டிருக்கும் வீடுகளை எஸ்எம்எஸ் மூலம் கண்காணிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர். உள்நாட்டு பாதுகாப்பு பிரிவில் ஐஜியாக பணியாற்றிய போது நவீன தொழில்நுட்பங்களை புகுத்தியதில் முக்கிய பங்கு வகித்தவர். 2004ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை போதைப்பொருள் தடுப்பு பிரிவின் தென் மண்டல இயக்குநராக பதவி வகித்தபோது, நாட்டிலேயே அதிகளவில் ஹெராயின் பறிமுதல் செய்தவர். சிறந்த காவல் பணிக்காக 2019ஆம் ஆண்டு குடியரசுத்தலைவரின் பதக்கம் பெற்றவர் சங்கர் ஜிவால்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com