பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்கும் திட்டம் முதற்கட்டமாக நாளை கோயம்பேட்டில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சள் பைகளை பயன்படுத்தும் விதமாக, ’மீண்டும் மஞ்சப்பை’ என்ற மக்கள் இயக்கத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, இந்த இயக்கத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பணியில் சுற்றுச்சூழல் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில், நாளை முதற்கட்டமாக கோயம்பேட்டில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இத்திட்டம் விரைவில் விரிவுப்படுத்தப்படும். 10 ரூபாய் நாணயத்தை போட்டால் மஞ்சள் பை விழும் வகையில் அந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் காய்கறி பழம் மற்றும் மொத்த தானிய விற்பனை சந்தை இருக்கிறது. நாள்தோறும் இங்கு வரும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பைகளை கொண்டு வருவதில்லை எனக் கூறப்படுகிறது. இவர்கள் பிளாஸ்டிக் பைகளை மட்டுமே நம்பி சந்தைக்கு வருகின்றனர். இதனால் பிளாஸ்டிக் பயன்பாடு கணிசமாக அதிகரிக்கிறது. இதை தடுப்பதற்காகவே இந்த திட்டம் கோயம்பேட்டில் தொடங்கி வைக்கப்படுகிறது. ஒரு சில வாரம் கழித்து பாரிமுனை வியாபாரப் பகுதியில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.