நூல் விலை உயர்வை கண்டித்து ராஜபாளையம் மற்றும் ஆவரம்பட்டி பகுதிகளைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்கள், ஐந்தாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் மற்றும் ஆவரம்பட்டி பகுதிகளில் பருத்தி சேலை உற்பத்தி செய்யும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகிறது. இந்த தறிகளை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
நாள் ஒன்றுக்கு ரூ. 16 லட்சம் மதிப்புள்ள 4 ஆயிரம் நூல் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், தொழிலாளர்கள் சுமார் ரூ. 5 லட்சம் வரை தினமும் ஊதியமாக பெற்று வந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு வருடத்தில் நூல் விலை 200 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள உற்பத்தியாளர்கள், நூல் விலை உயர்வை ரத்து செய்யக் கோரி 5 ம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப் போராட்டம் ஐந்தாவது நாளாக இன்றும் தொடர்கிறது. இந்த ஐந்து தினங்களில் தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சம் ஊதிய இழப்பும், ரூ. 80 லட்சம் உற்பத்தி இழப்பும் ஏற்பட்டுள்ள நிலையில், ரூ. 4 லட்சம் அரசுக்கு ஜிஎஸ்டி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, நூல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என பருத்தி சேலை உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்