திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே திருவாஞ்சியம் உடையார் குளம் தெருவில், சுமார் 50-க்கும் மேற்பட்ட 'பூம்பூம் மாட்டுக்காரர்கள்' என அழைக்கப்படும் ஆதியன் பழங்குடியினர் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசித்துவரும் மாரிமுத்து, அஞ்சம்மாள் தம்பதியருக்கு இரண்டு மகன்கள் மற்றும் 20 வயதுடைய முத்துலட்சுமி என்ற பெண் உள்ளார். முத்துலட்சுமியை தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அருகே முத்து என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்த நிலையில் கர்ப்பிணியான முத்துலட்சுமி தலை பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு திருவாஞ்சியம் வந்துள்ளார். பிரசவத்திற்காக கடந்த 03.05.2023 அன்று திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முத்துலட்சுமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது அறுவை சிகிச்சை செய்த போது சிறுநீர் போகும் வழியை சேர்த்து தைத்துள்ளதாகவும், இதனால் சிறுநீர் மற்றும் மலமும் ஒரே வழியில் கழிவதால் முத்துலட்சுமி அவஸ்தைக்கு உள்ளாகியுள்ளார் எனவும் அவர் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் முத்துலட்சுமிக்கு குழந்தை பிறந்தும் மருத்துவர்கள் காரணம் ஏதும் சொல்லாமல் 22 நாட்களாக மருத்துவமனையிலேயே வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த நிலையில் 20.06.2023 அன்று தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள் என, மேல் சிகிச்சைக்கான எந்த ஒரு வழிமுறையையும் கூறாமல் மருத்துவமனையில் இருந்து முத்துலட்சுமியை வலுக்கட்டாயமாக டிசார்ஜ் செய்து உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவர்களின் அலட்சிய போக்கால் முத்துலட்சுமி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்கள் மகளை காப்பாற்றித் தருமாறு முத்துலட்சுமியின் உறவினர்கள் 200க்கும் மேற்பட்டோர், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரமாக நீடித்த இந்த போராட்டம் பிறகு நன்னிலம் காவல்துறையினர் வந்து நடத்திய பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து கைவிடப்பட்டது.
அதன் பிறகு காவல்துறையினர் ஏற்பாட்டில் 108 ஆம்புலன்ஸ் வந்து முத்துச்செல்வியை உயர் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையின் அலட்சிய போக்கால் பாதிக்கப்பட்ட ஆதியன் பழங்குடி பெண்ணுக்கு உரிய நீதியும் நிவாரணமும் கிடைக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.