அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்கக்கூடாதா ? - வாயில் கருப்புத் துணி கட்டி எழுத்தாளர்கள் போராட்டம்

அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்கக்கூடாதா ? - வாயில் கருப்புத் துணி கட்டி எழுத்தாளர்கள் போராட்டம்
அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்கக்கூடாதா ? - வாயில் கருப்புத் துணி கட்டி எழுத்தாளர்கள் போராட்டம்
Published on

சென்னையில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்கக் கூடாது என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாயில் கருப்புத் துணி கட்டி எழுத்தாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை நந்தனம் பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜனவரி 9ம் தேதி முதல் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில், அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்பனை செய்ததாக பத்திரிகையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பல்வேறு தரப்பினரின் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசனும் தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

‘கீழடி ஈரடி’ என்ற தலைப்பில் உரையாற்றுவதற்காக, புத்தகக் கண்காட்சியில் சு.வெங்கடேசன் பங்கேற்றார். பேச்சின் தொடக்கத்திலேயே, கீழடி குறித்து உரையாற்றப்போவதில்லை எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்திய அவர், பபாசிக்கு எதிராக பல விமர்சனங்களை முன்வைத்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமது விமர்சனங்கள் தொடர்பாக விளக்கமளித்தார். “பபாசியின் நடவடிக்கை கருத்துரிமைக்கு எதிரானது. கருத்து சுதந்திரத்தை காவு கொடுக்க முடியாது” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை புத்தகக் கண்காட்சியில் அரசை விமர்சிக்கும் வகையிலான புத்தகம் விற்பனை செய்யக் கூடாது என பபாசி எடுத்துள்ள முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எழுத்தாளர்கள், கலைஞர்கள் வாயில் கருப்பு துணி அணிந்து கண்காட்சி நடைபெறும் இடத்திலேயே பேரணியாக சென்றனர். எழுத்தாளர் ஆழி செந்தில் நாதன், அருணன், கவிஞர் சல்மா, சுகிர்தராணி உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

அப்போது பேசிய எழுத்தாளர் அருணன், “அரசு கட்டமைப்புக்கு எதிராக புத்தகம் எழுதக் கூடாது என நினைக்கின்றனர். இதுபோல் சொல்வதற்கு எந்த சட்டமும் இல்லை. இது அரசுக்கு எதிரான புத்தகம் என எப்படி பபாசி தீர்மானிக்க முடியும். இதுபோன்ற முடிவு எடுத்தது ஏற்புடையதல்ல. எழுத்தாளர்கள், பதிப்பாளர்களை பாதுகாக்கும் பொறுப்பு பபாசி அமைப்புக்கு இருக்கிறது” என்றார். கவிஞர் சல்மா கூறிய போது, “அரசுக்கு எதிரான புத்தகமா என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். இன்று புத்தகம் விற்கக் கூடாது என பேசுவார்கள். நாளை இதுபோல் யாரும் எழுதக் கூடாது என பேசுவார்கள். கருத்துரிமையை பாதுகாக்கும் முயற்சி தான் இந்த எதிர்ப்பு” என்றார்.

இதுதொடர்பாக பபாசி தலைவர் சண்முகத்திடம் கோரிக்கை மனுவையும் அவர்கள் அளித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com