ராஜ் கெளதமன்
ராஜ் கெளதமன்எக்ஸ் தளம்

"தமிழ் சமூகத்தின் அறிவியக்கத்திற்கு செழுமையூட்ட உழைத்தவர்” - எழுத்தாளர் ஆளுமை ராஜ் கெளதமன் மறைவு!

தமிழ் உலகம் கண்ட மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர், ராஜ் கெளதமன் (வயது 74). உடல்நலக்குறைவால், அவர் இன்று (நவ.13) காலமானார்.
Published on

எழுத்தாளர்  ராஜ் கெளதமன் மறைவு

தமிழ் சமூகம் கண்ட மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர், ராஜ் கெளதமன் (வயது 74). உடல்நலக்குறைவால், அவர் இன்று (நவ.13) காலமானார்.

பின்னணி!

விருதுநகர் மாவட்டம், புதுப்பட்டி கிராமத்தில் 1950ஆம் ஆண்டு பிறந்த எஸ்.புஷ்பராஜ், பின்னாளில் தனது பெயரை ராஜ் கௌதமன் என மாற்றிக்கொண்டார். புதுச்சேரி அரசு கலைக் கல்லூரியில் தமிழ்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ராஜ் கெளதமன், ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை தனது எழுத்து மூலம் தமிழகம் முழுவதும் கொண்டு சென்றவர். ஆய்வு, புனைவு, மொழிபெயர்ப்பு, விமர்சனம் என்று அனைத்திலுமே நவீன முறையை கையாண்டவர்.

நாவலாசிரியர் அ.மாதவையா குறித்த ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்ற அவர், தொடர்ந்து, மார்க்சிய சமூகவியலிலும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். பண்பாட்டு ஆய்வாளராக அறியப்பட்ட ராஜ் கௌதமன், தலித்தியம், பின்நவீனத்துவம், பழந்தமிழ் இலக்கியம் தொடர்பில் பல ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளார். சிலுவைராஜ் சரித்திரம், லண்டனில் சிலுவைராஜ், காலச்சுமை ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார்.

தாக்கம் செலுத்திய படைப்புகள்!

35க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள ராஜ் கௌதமன், தமிழகத்தில் தலித்திய சிந்தனைகளை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவராக அறியப்படுகிறார். சார்லஸ் டார்வினின் ‘தி ஒர்ஜின் ஆஃப் ஸ்பைசெஸ்’ (உயிரினங்களின் தோற்றம்), எரிக் ஃப்ராமின் ’தி சான் சொசைட்டி’ (மனவளமான சமுதாயம்) ‘தி ஆர்ட் ஆஃப் லவ்விங்’ (அன்பு எனும்), போன்ற பல்வேறு பிரபல நூல்களை மொழிபெயர்த்துள்ளார். தன்னுடைய எழுத்துக்காக விளக்கு விருது, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது, வானம் இலக்கிய விருது போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.

ராஜ் கௌதமன் குறித்து விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் பாட்டும் தொகையும் என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வரலாற்றை வழி மறித்தவன் என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ராஜ் கௌதமன் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்| களத்தில் யார் யார்?.. அநுர குமராவுக்கு சிறப்பு மெஜாரிட்டி ஏன் அவசியம்?

ராஜ் கெளதமன்
Remembering Delhi Ganesh | இன்றளவும் நினைவுகூரப்படும் டெல்லி கணேஷ் நடித்த கதாப்பாத்திரங்களில் சில!

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் பதிவு

தமிழக முதல்வர் தன்னுடைய இரங்கல் பதிவில், “தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டு ஆய்வாளராக விளங்கிய பேராசிரியர் ராஜ் கௌதமன் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

ஒடுக்கப்பட்டோர் பார்வையில் சமூக வரலாற்று ஆய்வுகள், படைப்பு, தன்வரலாறு விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் விரிவான பங்களிப்புகளை வழங்கிய தமிழின் முன்னணி முற்போக்குச் சிந்தனை முகமான ராஜ் கௌதமன் மறைவு என்பது தமிழ்ச் சமூகத்துக்கான பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது இணையர் பேராசிரியர் க.பரிமளம், அவரது தங்கை எழுத்தாளர் பாமா உள்ளிட்ட குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ் அறிவுப்புலத்தைச் சேர்ந்த தோழர்கள் என அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், “அறம், அதிகாரம் என்ற இரண்டுசொல் கொண்டு பழந்தமிழ் இலக்கியம் முழுமையும் ஆய்ந்தறிந்து ராஜ் கெளதமன் வரைந்துகாட்டிய சித்திரம் தமிழ் சிந்தனை உலகிற்குப் புத்தொளியூட்டியது. தமிழ்ச் சமூகத்தின் அறிவியக்கத்திற்குச் செழுமையூட்ட வாழ்வு முழுவதும் உழைத்திட்ட அறிவாளுமை தோழர் ராஜ் கெளதமனுக்கு இரங்கல்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: பரப்புரையில் துப்பாக்கிச் சூடு| உச்ச பாதுகாப்பில் ட்ரம்ப் வீடு.. தோட்டத்தைச் சுற்றிவரும் ரோபோ நாய்!

ராஜ் கெளதமன்
#PTExclusive | "நான்கு சுவற்றுக்குள் இருக்கும் ஆளுநர் அல்ல நாங்கள்" - தமிழிசை செளந்தரராஜன்

இயக்குநர் பா.ரஞ்சித் இரங்கல் பதிவு

திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், “தமிழ்ச் சமூகத்தின் ஒப்பற்ற அறிஞர் ராஜ்கௌதமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவருடைய ஆய்வு, புனைவு, மொழிபெயர்ப்பு, விமர்சனம் என்று அனைத்திலுமே நவீன முறையை கையாண்டவர், தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். தலித் திறனாய்வு முறையியல் உருவானபோது அதன் முதன்மை முகமாய் இருந்தவர். கற்றுத்தேர்ந்த கோட்பாடுகளின்மூலம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளாமல், கற்ற அனைத்தையும் அடித்தட்டு மக்களின் வரலாற்றை புரிந்துகொள்ளவும் அவர்களின் அரசியலை நிறுவவும் எழுதியவர். 'தலித்' என்கிற சொல்லைப் பிறப்பின் அடையாளமாகப் பார்க்காமல் அதை ஒரு குணாம்சமாகக் கருதினார்.

வரலாறு முழுக்க வெளிப்பட்ட அதிகாரத்திற்கு எதிரான மனநிலையே அது என்றார். புனைவும் அரசியலும் வெவ்வேறல்ல என அழுத்தம்திருத்தமாகப் பதிவுசெய்தவர். இந்த முறைமையைக் கையாண்டு சங்க இலக்கியம் தொட்டு சமகால இலக்கியம் வரை ஆய்வு செய்தவர் என்றாலும், படைப்புக் குணாம்சத்தின் நுட்பங்களைக் கணக்கில்கொண்டே அவற்றை மறுவாசிப்புக்கு உள்ளாக்கினார். படைப்பூக்கத் தன்மையும், ஆய்வும், அரசியலும் வெவ்வேறல்ல என நம் ஒவ்வொருவருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்த எழுத்தாளர், ஐயா ராஜ் கௌதமன் தமிழ் அறிவு வரலாற்றில் என்றும் நீடித்திருக்கக் கூடியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் இலக்கியத்திற்கும், ஆய்வு உலகத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாய் தமிழ்நாடு அரசு அவருக்கு அரசு மரியாதையுடன் கூடிய அஞ்சலி செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: ’உள்ளே வராதே..’ - போட்டோ ஃபிரேமுக்குள் வந்த கட்சித் தொண்டரை எட்டி உதைத்த பாஜக தலைவர்.. #ViralVideo

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com