பிரபல எழுத்தாளரும் சினிமா வசனக்கர்த்தாவுமான பாலகுமாரன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 71.
பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் சென்னை மயிலாப்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என தெரிகிறது.
மறைந்த பாலகுமாரனுக்கு மனைவி கமலா, துணைவி சாந்தா, மகள் கவுரி, மகன் சூர்யா ஆகியோர் உள்ளனர். இதில் சூர்யா, சினிமா இயக்குனர்.
ஏராளமான சிறுகதை, நாவல்கள் மற்றும் கட்டுரைகளை எழுதியுள்ள இவரது, மெர்க்குரி பூக்கள், இரும்புக்குதிரை, தாயுமானவன் ஆகிய நாவல்கள் புகழ்பெற்றவை. கமல்ஹாசனின் நாயகன், ரஜினியின் பாட்ஷா, டைரக்டர் ஷங்கரின் ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ் உட்பட சுமார் 23 திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.
பாலகுமாரன், தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பழமார்நேரி என்ற ஊரில் பிறந்தவர். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும் கே. பாக்யராஜுடன் இணைந்து சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். ’இது நம்ம ஆளு’ படத்தை கே.பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.