திருப்பூர் மாநகராட்சி மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்ட குளுகோஸ் மருந்தில் புழு இருந்ததாக புகார் எழுந்துள்ளது.
திருப்பூர் - ஊத்துக்குளி சாலை, புது ராமகிருஷ்ணபுரம் பகுதியில் தாய் சேய் நல விடுதி உள்ளது. இந்த மருத்துவமனைக்கு அதே பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவர் தனது சகோதரி தேவியை கர்ப்ப கால சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். மருத்துவமனை சென்ற தேவிக்கு தலைசுற்றல் மற்றும் வாந்தி ஆகியவை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து தேவியை பரிசோதனை செய்த மருத்துவர் அருண்ராஜ் அவருக்கு ஊசி மூலம் மருந்து செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனையடுத்து செவிலியர்கள் ஊசி மூலம் மருந்தினை செலுத்தியுள்ளனர். இதனிடையே தங்கையை பார்க்க வந்த ஜோசப், அவருக்கு செலுத்தி வரும் மருந்தில் புழு மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவ நிர்வாகத்திடம் கேட்ட போது ஜோசப்புக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஜோசப் தனது தங்கையை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து சென்றார். இது தொடர்பாக மாநகர் நல அலுவலர் பூபதியிடம் கேட்ட பொழுது, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு கழகத்தால் வழங்கப்பட்ட மருந்தில் மிதந்தது தூசாக இருக்கலாம் என்றும், வந்த மருந்துகள் அனைத்தும் பரிசோதனைக்கு திருப்ப அனுப்பபட்டுள்ளதாகவும், துறைரீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.