உலக மகளிர் தினம் : தலைவர்களின் வாழ்த்துகள்

உலக மகளிர் தினம் : தலைவர்களின் வாழ்த்துகள்

உலக மகளிர் தினம் : தலைவர்களின் வாழ்த்துகள்
Published on

மகளிர் தினத்தையொட்டி, தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பெண்களை அடிப்படையாகக் கொண்ட குடும்ப அமைப்பில், பெண்களே அனைத்துமாக இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். பெண்கள் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் செயல்பட்டு, வாழ்வில் சோதனைகளை உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து‌ தெரிவித்துள்ளார். தேசிய அளவிலான 2019ஆம் ஆண்டுக்காக நாரி சக்தி புரஸ்கார் விருதுக்கு தமிழக அரசு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். 

உள்ளாட்சி, நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் 33 சதவீத இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுவதன் மூலமே மகளிரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது மகளிர் தின வாழ்த்து செய்தியாக தெரிவித்துள்ளார். செல்வமகள் சேமிப்பு, முத்ரா வங்கித் திட்டங்களாலும், பல பெண்களுக்கு அமைச்சரவையில் சவாலான துறைகளை ஒதுக்கீடு செய்ததாலும் ம‌களிரின் நம்பிக்கை நட்சத்திரமாக பிரதமர் மோடி விளங்குவதாகவும், இந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி பெண்கள் நட்சத்திரமாக ஒளிர வேண்டும் என்றும் பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ள‌ர்.

பெண்ணியம் வாழ்க, பெண்களின் உரிமை போராட்டங்கள் வெல்ல இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. பெண்களின் உரிமைக்காகவும், கல்வி, வேலைவாய்ப்பு, வளமான பாதுகாப்பான வாழ்க்கைக்காகவும், அவற்றை சீர்குலைக்கிற கொள்கைகளுக்கு எதிராகவும் முன்னிலும் வீரியமான போராட்டங்கள் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. மகளிர் தினத்தில் அனைத்து நலமும், வளமும் பெற்று வாழ தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்தியுள்ளர். 

இதேபோல், ஒவ்வொரு நாளும் எத்தனையோ சாதனைக‌ளை படைத்து வரும் பெண்களுக்கு மென்மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில் மார்ச் 8 உலக மகளிர் தின நாள் கொண்டாட்டங்கள் அமையட்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்தியுள்ள‌ர். கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு சம உரிமைகள் வழங்கிடவும், அதனை பாதுகாக்கவும் அரசியல் சட்டத்திலேயே திருத்தம் கொண்டுவர இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத்தலைவர் பாரிவேந்தர் வலியுறுத்தியுள்ளார். ஜெயலலிதாவின் பெருங்கனவான மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டினைக் கொண்டுவர மகளிர் தின நாளில் சபதம் எடுப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் தெரிவித்துள்ளது. தமிழ்மாநில காங்கிரஸ் வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்து செய்தியில், பெண்களின் முன்னேற்றத்திற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய‌, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com