உலகநாடுகளில் இளைஞர்களை அதிகம் கொண்ட நாடு இந்தியா. எதிர்கால உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக இந்தியா பார்க்கப்படுகிறது. ஆனால், சிறு சிறு நிகழ்வுகளுக்கும் மாணவர்களும் இளைஞர்களும் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ளும் சூழல் அதிகரித்து வருகிறது. மனநிலை தொடர்பாக பல்வேறு காரணங்கள் இருந்தாலும் குடும்பம், கல்வி, சமூகம் போன்ற சூழல்களில் அவர்கள் பெறும் அழுத்தம் அல்லது அழுத்தப்படுகிறோம் என்ற தவறான புரிதல் போன்ற பல்வேறு காரணங்களாலும் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் நிகழ்கின்றன.
இந்நிலையில் புற அழுத்தங்களால் மாணவர்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து குழந்தை உரிமை செயற்பாட்டாளர் அ.தேவநேயன் அவர்களை தொடர்பு கொண்டோம்.. தற்போதைய மாணவர்களின் சூழல், அவர்களது செயல்பாடுகள் போன்றவற்றில் அவர் கொண்டுள்ள ஆதங்கம் கேள்விகளாக நம் முன் நிற்கின்றது.
அவர் பேசியவை, “தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்காலத்தில் வளரிளம் பருவத்தினரின் தற்கொலைகளும் அதிகரித்துள்ளது. தற்கொலைக்கு பல்வேறு வகை காரணங்களை உளவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள். ஆனால், குழந்தைகள் நம்பிக்கை உணர்வு இல்லாமல் வளர்ந்து வருகிறார்களோ என்ற அச்சம் வருகிறது. அறிவியல், தொழில்நுட்பம், தொலைத் தொடர்புகள் அதிகமாக வளர்ந்துள்ள காலக்கட்டத்திலும் அதற்கு நேரெதிராக சூழல் சென்றுள்ளது வருத்தமளிக்கிறது. அறிவியல் மனப்பான்மை வளர்ந்தால் கண்டிப்பாக தற்கொலை குறைந்துவிடும்.
என்னால் ஏன் படிக்க முடியவில்லை? என்ற அறிவியல் காரணம் வந்துவிட்டாலே தற்கொலைகள் குறைந்துவிடும். மாணவர்களுக்கு அறிவியல் பார்வையோ, பகுத்தறியும் சிந்தனையோ, நம்பிக்கையூட்டும் தன்மைகளோ வளர்ந்துள்ளதா என்றால் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. அதை கல்விக்கூடங்களோ, சமூகங்களோ, ஊடகங்களோ கொடுக்கவில்லை. மாணவர்களை நுகர்வுக் கலாச்சாரத்தில் தான் வைத்துள்ளார்கள். எதாவது நடக்கவில்லையோ அதை ஏற்றுக்கொள்ளும் தன்மை மாணவர்களது மனதில் கட்டமைக்கப்படவில்லை.
மதிப்பெண்கள் மட்டும் தானா கல்வி. தொழிற்நுட்ப உலகம் போட்டி சூழலை மட்டும் உருவாக்குகிறதே ஒழிய ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கவில்லை. இன்றைய கல்வி சூழலும் மாணவர்களுக்கு திணிப்புகளாகத்தான் உள்ளது. நான் டாக்டருக்கு படிக்கவில்லை, என் பிள்ளை டாக்டராக வேண்டும் போன்ற திணிப்புகள் மாணவர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றன.
நான் அடிக்கடி சொல்வது, கல்வி முறை மாணவர்களை பிராய்லர் கோழிகளாகத்தான் உருவாக்குகிறது. மாணவர்களுக்கு தேவையான அனைத்தும் வசதிகளும் கிடைத்துவிடும்.. ஆனால் அடைக்கப்பட்ட மூச்சு வாங்க முடியாத ஒரு கல்வி நிலை தான் இருக்கிறது. மாணவர்களிடம் தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையே கிடையாது. தோல்விகள் என்பது நமக்கான படிப்பினை தான். குழந்தைகள் கேட்கும் அனைத்திற்கும் நாம் சரி என்கிறோம். அதனால் குழந்தைகளுக்கு இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையே இல்லை.
அதற்காக குழந்தைகளிடம் கஷ்டத்தை கொடுக்கக்கூடாது, குடும்பத்தின் சூழலை புரியவைக்க வேண்டும். அப்பா இன்ஸ்பெக்டர் மாதிரியும் அம்மா வில்லி மாதிரியும் இருக்கும் குடும்பங்களில் குழந்தைகள் எப்படி தனக்கு நேர்வதை பகிர்ந்துகொள்ளும்.
மாணவர்களுக்கு நிஜம் எது பொய் எது என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும், சினிமாவில் வருவது மட்டுமே நிஜம் என நினைக்கிறோம். வாட்ஸாப் போன்றவற்றில் வருவதை கூட உண்மை என நினைக்கிறோம். அதில் உண்மை பொய்களை சொல்லி கொடுக்க வேண்டும்.
இதனை அடுத்து மாணவர்கள் போலி உலகம் ஒன்றை உருவாக்கிக் கொள்கிறார்கள்.. மாணவர்களை இன்றைய பிரச்சனைகளை எதிர்கொள்ளும் அளவிற்கு வளர்க்கவில்லை என்பதே உண்மை. மாணவர்களின் கேரியரைத்தான் அனைவரும் முதன்மைப் படுத்துகிறார்கள்.
இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் கவுன்சிலிங் வேண்டும் என்கிறார்கள்.. ஆசிரியர்களும் பெற்றோர்களும் தான் கவுன்சிலிங் கொடுப்பவர்களாக மாற வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் கவுன்சிலிங் கொடுப்பவர் ஒருவரை நிறுத்தினால் 1500 மாணவர்களுக்கும் ஒரே நாளில் கவுன்சிலிங் கொடுக்க முடியுமா? கவுன்சிலிங் போட்டால் தீர்வு கிடைத்துவிடுமா.. இந்த நவீனமயமான உலகிற்கு ஆசிரியர்களை தயார்படுத்தியுள்ளோமா? குழந்தைகள் தெரிந்து கொண்ட அளவிற்கு ஆசிரியர்கள் தெரிந்து வைத்துள்ளார்களா? 1980 அல்லது 1990 களில் படித்தவர்களுக்கு குழந்தைகளின் மனநிலை பற்றி தெரியுமா?
மாணவர்கள் கல்வியை ஆன்லைனில் கற்றுக்கொள்வார்கள். ஆசிரியர்களின் தேவை என்பது மாணவர்களை மனிதர்களாக உருவாக்க வேண்டும். மாணவர்கள் சமுதாயத்தில் உள்ள வர்க்க, சாதி, மதப் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் ஆளுமைகளாக உருவாக்க வேண்டும்.
தற்கொலை முடிவு என்பது ஒரே நொடியில் எடுக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் நபர்கள் யார் இருக்கிறார்கள். ஆசிரியர்கள் பேராசிரியர்கள் வாசிப்பதே இல்லை. ஆசிரியர்கள் தற்கால சூழலில் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறார்கள். அவர்களுடன் துறை சார்ந்து யாரும் பேசுகிறார்களா. ஆசிரியர்களது பிரச்சனை குறித்து ஆராய்கிறோமா?
தமிழகத்தில் இத்தனை தற்கொலைகள் நடக்கிறது, தமிழக அரசு, கல்வித்துறை, சுகாதாரத்துறை, காவல்துறையினர் பேசுகிறார்களா? தற்கொலை முயற்சி தடுப்பு நாளின் போது பேரணி நடத்துவார்கள் அல்லது மாநாடு நடத்துவார்கள். அதோடு முடித்துக் கொள்வார்கள். அப்படியானால் இது ஒரு சடங்கு தானே. அடுத்தடுத்த வருடங்களில் தற்கொலைகளை குறைக்க செய்ய வேண்டிய மாற்றங்கள், பாடத்திட்டங்களில் செய்ய வேண்டிய மாற்றங்கள், சமுதாயத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள், சினிமாவில் செய்ய வேண்டிய மாற்றங்கள் இது குறித்தெல்லாம் விவாதிக்க வேண்டும்.... தொடர்ச்சியான செயல்பாடுகள் மூலமே தற்கொலைகள் இல்லாத தமிழகத்தை இந்தியாவை உருவாக்க முடியும்...” என்றார்.
கடந்த ஜூன் மாதம் 12 ஆம் தேதி உலக குழந்தைகள் உழைப்பு எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதையொட்டி, அ.தேவநேயன் புதிய தலைமுறை டிஜிட்டலுக்கு அளித்த பேட்டி...