உலகப்புகழ் பெற்ற World Press Photo Awards விருது பெற்ற மதுரையை சேர்ந்த முதல் தென்னிந்திய புகைப்பட கலைஞர் செந்தில்குமரன் வரும் 14 ஆம் தேதி நெதர்லாந்தில் விருதைப்பெறவுள்ளார்.
‘வேர்ல்ட் பிரஸ் போட்டோ' அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்பட்ட உலக அளவிலான பத்திரிகை புகைப்பட கலைஞருக்கான விருதுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் உலக அளவில் ஆப்ரிக்கா, ஆசியா, ஐரோப்பியா, வடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, தெற்காசியா மற்றும் ஓசேனியா ஆகிய 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒற்றையர், கதைகள், நீண்ட கால திட்டங்கள் மற்றும் திறந்த வடிவம். செய்தித் தருணங்கள், நிகழ்வுகள் மற்றும் பின்விளைவுகள், அத்துடன் சமூக, அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அல்லது தீர்வுகளை ஆவணப்படுத்தும் ஆகிய தலைப்புகளின் அடிப்படையில் புகைப்பட விருதுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் 130 நாடுகளில் இருந்து 4,800 புகைப்படக் கலைஞர்கள் பங்கேற்றனர்.
இதில் மதுரையை சேர்ந்த புகைப்பட கலைஞரான செந்தில்குமரன் கலந்துகொண்டார். நீண்ட கால திட்டங்கள் என்ற பிரிவின் கீழ் பத்தாண்டுகளாக புலிகளுக்கும் மனிதனுக்குமான வாழ்வியல் குறித்த புகைப்படத்திற்காக பதிவு செய்திருந்த நிலையில் உலகப் புகழ்பெற்ற World Press Photo Awards விருதிற்கு ஆசியக் கண்டத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்டார். உலக அளவில் நடைபெறும் இந்த போட்டியில் பத்திரிகை புகைப்பட கலைஞருக்கான சர்வதேச விருதை தென்னிந்தியர் ஒருவர் பெறுவது இதுவே முதல்முறையாகும்.
புகைப்படங்களுக்கான விருது தேர்வில் புகழ்பெற்ற ஜப்பான், பாலஸ்தீனம், சீனா உள்ளிட்ட நாடுகளின் பல்வேறு புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. ஆறு சுற்றுகளாக புகைப்பட தொகுப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு இந்த சர்வதேச விருதுக்கு செந்தில்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருதுபெற்ற புகைப்பட கலைஞர் செந்தில்குமரன் நேஷனல் ஜியாகிரபிக் உறுப்பினராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விருது வென்றது குறித்து செந்தில்குமார் பேசும்போது,
“புகைப்படங்கள் என்பது தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், நம் சிந்தனைகளை வெளிப்படுத்தும் பொருளாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை என்பதால் புலிகளுக்கும் மனிதனுக்குமான வாழ்வியல் சூழலை புகைப்படங்களாக காட்சிப்படுத்தினேன். நாம் செய்ய முடியாததை புகைப்படங்கள் செய்து விடும். புகைபப்படங்கள் கேள்வி எழுப்ப வேண்டும். தூண்டுதலாக அமையவேண்டும். புகைப்படங்கள் ஆயுதமாக குரலாக இருக்க வேண்டும். நான் புகைப்படத்தை ஆயுதமாகவே பயன்படுத்தினேன். ஆஸ்கருக்கு அடுத்தபடியாக உள்ள இந்த சர்வதேச விருதை பெற்றதில் மகிழ்ச்சி ”என்று செந்தில்குமார் கூறுகிறார்.
புகைப்படத்துறையில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ள செந்தில்குமரன் தற்போது உலக அளவில் தேர்வு செய்யப்பட்டிருப்பது மதுரை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் சாதனை படைத்த புகைப்பட கலைஞர் செந்தில்குமரனுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மதுரையின் சிறந்த கலைஞர்களில் ஒருவரும் அன்பு நண்பருமான செந்தில்குமார் அவர்கள் உலகப் புகழ்பெற்ற World Press Photo Awards விருதிற்கு ஆசியக் கண்டத்தின் சார்பில் தேர்வாகியிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. எனவும் பல்லுயிர் காப்பில் முனைப்போடு செயலாற்றி கடந்த பத்தாண்டுகளாக புலிகளுக்கும் மனிதனுக்குமான வாழ்வியல் குறித்த அவரது பணிக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம் இது” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.