இந்தியாவில் முதன்முறையாக பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற உலக அளவிலான இரும்பு மனிதன் போட்டியில் பங்கேற்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
உலக அளவில் மிகவும் பிரபலமான விளையாட்டு போட்டிகளில் ஸ்ட்ராங் மேன் போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் சர்வதேச அளவில் பங்கேற்கும் வீரர்கள் சாதாரணமாக இல்லாமல் தங்கள் உடல் எடையைவிட பல மடங்கு எடை கொண்ட பொருட்களை தூக்கி சாதனை படைத்தது வருகின்றனர்,
இந்நிலையில், இந்த ஆண்டிற்கான உலக இரும்பு மனிதன் போட்டிகள் முதல்முறையாக இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நேற்று நடைபெற்றது. இதில், 7 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற நிலையில், 85 கிலோ எடை பிரிவில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்ற இளைஞர் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார். குறிப்பாக, லாக் பிரஸ், யோக் வாக், டயர் பிலிப் மற்றும் ஸ்டோன் என்ற பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில், முதல் இடத்தை பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் பெற்ற நிலையில், இரண்டாம் இடத்தை பிடித்த கண்ணன் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஏற்கனவே கண்ணன் பல்வேறு சாதனைகள் படைத்து இரும்பு மனிதன் என்ற பட்டம் பெற்ற நிலையில், தற்போது உலக இரும்பு மனிதன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது